“பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்” – தங்கம் தென்னரசு

Priya
957 Views
3 Min Read

“அரசியல் காரணங்களுக்காக பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யபட்டால், அது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். திமுக ஆட்சியில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது என்ற காரணத்துக்காக இந்த திட்டத்தை ரத்து செய்வது பொருளாதார வளர்ச்சியை தடுக்கும். ஏற்கெனவே ஓசூர் விமான நிலையத்தை இழந்துவிட்டோம். மீண்டும் பரந்தூர் திட்டத்தையும் இழந்தால் நாட்டின் தொழில் வளர்ச்சி எங்கே போகும்” என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தவெக அரசுக்கு எதிராக சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “ சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் பரந்தூர் விமான நிலையத்தின் அவசியத் தேவைகள், அதன் முக்கியத்துவம், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் இன்று உரையாற்ற இருந்தோம். ஆனால், முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டு, அதில் பேசுவதற்கு ஏதும் இல்லை என தெரிவித்துவிட்டனர்.

இந்த விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் அவசியம் குறித்த விஷயங்களை பேசவிருந்த எதிர்க்கட்சிகளின் குரலை திட்டமிட்டு நிராகரித்து, 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 110 விதியின் கீழ் விவாதிக்கவில்லை என்றாலும், கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசவும் சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

Advertisement

பரந்தூரில் அமையவுள்ள இந்த விமான நிலையம் தமிழகத்தின் பொருளாதார, தொழில் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒன்று. சென்னையில் தற்போது உள்ள விமான நிலையம் 2008-ம் ஆண்டில் விமானப்பயணிகள் எண்ணிக்கையில் நாட்டில் மூன்றாவது இடத்தில் இருந்தது. அப்போது பெங்களூரு 5 வது இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது பெங்களூரு விமான நிலையம் 3-ம் இடத்துக்கு வந்துவிட்டது, சென்னை விமான நிலையம் 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சரக்குகளைக் கையாளும் திறனில் ஐந்தரை லட்சம் டன் கையாளும் வகையில் பெங்களூரு விமான நிலையம் முன்னேறியுள்ளது. இந்தச் சூழலில் தான், சென்னையில் கிரீன் ஃபீல்டு விமான நிலையம் வர வேண்டும் என்று பரந்தூர் திட்டம் கொண்டுவரப்பட்டது. பரந்தூர் விமானநிலையம் வரும் என்ற நம்பிக்கையில் தான் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணற்ற தொழிற்சாலைகள் வந்துள்ளன.

பரந்தூர் விமான நிலையத்தை தேர்ந்தெடுக்கும் முன்பு சென்னையின் பல இடங்களை ஆய்வு செய்தோம். சென்னையின் புவியியல் அமைப்பின் படி மேற்குப் பகுதியில் விமான நிலையம் அமைவதே பொருத்தமாக இருக்கும், குறைவான மக்களே அங்கு பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படையில் பரந்தூரை தேர்வு செய்தோம். இப்போது பரந்தூர் திட்டத்தை கைவிடுவதாக கொள்கை முடிவெடுப்பதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதால் தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில்வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையத்துக்காக 90 சதவீத இடங்களை கையகப்படுத்தியுள்ளோம். இப்போது அந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டால், அந்த இடங்களை என்ன செய்யப் போகிறீர்கள். அந்த இடத்துக்கான இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால், அந்த நிலத்தை என்ன செய்வீர்கள். பரந்தூருக்கு பதிலாக வேறு எங்கே இடம் தேர்வு செய்வீர்கள். அந்த இடத்தில் சூழலியல், விவசாயிகள் பிரச்சினைகள் ஏற்படாதா?.

பரந்தூர் விமான நிலையம் வரும் என்ற எதிர்பார்ப்பில் தொடங்கப்பட்ட மெட்ரோ திட்டம் என்னவாகும். பரந்தூரில் இந்த விமான நிலையத்தை அமைப்பதுதான் சரியாக இருக்கும். அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டம் நிறுத்தப்பட்டால், அது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். திமுக ஆட்சியில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது என்ற காரணத்துக்காக இந்த திட்டத்தை ரத்து செய்வது பொருளாதார வளர்ச்சியை தடுக்கும்.

இப்போது பல தொழில்கள் ஆந்திராவை நோக்கிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே ஓசூர் விமான நிலையத்தை இழந்துவிட்டோம். ஆந்திராவின் குப்பத்தில் புதிய விமான நிலையம் வருகிறது. மீண்டும் பரந்தூர் திட்டத்தையும் இழந்தால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி எங்கே போகும். தவெக அரசு சொல்லியுள்ள 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எப்படி அடைய முடியும்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply