மாணவர்கள், இளைஞர்களின் நியாயமான உரிமைகளை அரசு மதிக்கும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து பேசியதாவது:
உயர் கல்வித் துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘உரிமைகளுக்காக போராடும் மாணவர்கள், குறிப்பாக இடதுசாரி மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாகநடவடிக்கை குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோல திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு வட்டாட்சியர், உரிமைக்காக போராடும் சுதந்திர நாட்டில் அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு பதில் அளித்து அமைச்சர்கள் கூறியதாவது:
அமைச்சர் செங்கோட்டையன்: வருவாய்த் துறை தலைமையிடத்தில் இருந்து ஒரு சர்வே நடத்த குஜிலியம்பாறைக்கு வட்டாட்சியரை அனுப்பினோம்.
அவர் தேவையின்றி இது போன்ற கடிதங்களை எழுதி அதன்மூலம் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் யார், யார் இருக்கிறார்கள் என்று புள்ளிவிவரத்தை கேட்டுள்ளார்.
இது அரசின் கவனத்துக்கும், எனது கவனத்துக்கும் வந்தவுடன், அந்த வட்டாட்சியர் உடனடியாக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் மீது தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அமைச்சர் பெ.விஸ்வநாதன்: மாணவர்களின் போராட்டம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு உடனே கொண்டு செல்லப்பட்டது.
அனைத்து அரசு கல்லூரிகளின் கல்விச் சூழல், ஒழுங்கு அமைதியை பராமரிப்பது, உறுதி செய்வதை முன்னிட்டு அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதில் தவறுதலாக சில வாசகங்கள், குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் பற்றி இருந்தன. இதை அறிந்து கல்லூரி இயக்குநரகம் உடனடியாக அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது.
எவ்வித உள்நோக்கமும் இன்றி முற்றிலும் கல்வி நிறுவனங்களில் ஒழுங்கு அமைதியை பராமரிக்கும் நோக்கில் இது அனுப்பப்பட்டது.
மாணவர்கள், இளைஞர்களின் உரிமையை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை. அவர்களது நியாயமான உரிமைகளை இந்த அரசு மதிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

