“தவெக ஆட்சியில் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயரும்” – பேரவையில் பழனிசாமி கணிப்பு

Priya
737 Views
2 Min Read

“தவெக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இந்த ஆட்சி முடியும்போது ரூ.10 லட்சம் கோடி கடன் என்பது ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ஓர் அரசின் ஆட்சி அமைந்ததும் முதல் 100 நாட்கள் முக்கியமானவை. அப்போதுதான் ஓர் அரசின் கொள்கைகள், நோக்கங்கள் தெளிவாக்கப்பட்டு, அரசின் புதிய முயற்சிகள், அதை அடைய தீர்மானிக்கும் பாதை என எல்லாம் தீர்மானிக்கப்படும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் முதலீடுகளும் ஈர்க்கப்படும்.

அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழகத்தின் கடன் சுமை ரூ.13 லட்சம் கோடியாக உள்ளது. வரலாறு காணாத அளவில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் வட்டி சுமை அதிகமாகிவிட்டது.

பட்ஜெட்டில் நிதி மேலாண்மையை சரிசெய்யும் திட்டங்கள் இல்லை. தவெக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இந்த ஆட்சி முடியும்போது ரூ.10 லட்சம் கோடி கடன் என்பது ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களுக்கு ‘வெற்றி’ என்ற அடைமொழியை கொடுத்துள்ளீர்கள். இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. திட்டங்களின் பெயரை மாற்றினால் மக்களுக்கு குழப்பம்தான் ஏற்படும்.

மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த நீங்கள், மக்கள் பிரச்சினையை தீர்க்க புதிய யோசனை கூடவா உங்களிடம் தென்படவில்லை. புதிய அரசு பொறுப்பேற்ற உடன் 100 நாள் திட்டத்தை வெளியிடுவது வழக்கம். ஆனால், பட்ஜெட்டில் அரசின் செலவுகளை குறைக்கும் அறிவிப்பு இல்லை. மக்களின் கவனத்தை ஈர்க்கும் கவர்ச்சி வார்த்தைகளே உள்ளன.

பேசாமலேயே செயல்படுவேன் என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் சிலசமயங்களில் பேசினால்தான் தீர்வு கிடைக்கும். இனிமேல் பேசி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும், வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்.

அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட்டது. ஆனால், அந்தப் பேருந்துகள் தற்போதும் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 20,000 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அனைத்து அரசு பேருந்திலும் ஏசி வசதி என்பது சாத்தியமில்லாதது.

மக்களுக்கு ஏசி பேருந்து தேவையில்லை. சாதாரண பேருந்தை மாற்றிக் கொடுத்தாலே மக்கள் பாராட்டுவார்கள். ஆனால், இந்த ஆண்டு 1000 பேருந்துகள் வாங்குவோம் என்று சொல்லியுள்ளீர்கள். இந்த ஆண்டு முடிந்துவிட்டது. 4 ஆண்டுகளில் எத்தனை பேருந்துகள் வாங்கப் போகிறீர்கள்? இது இயலாத காரியம்.

விவசாயிகள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். உழவன் செயலி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பழனிசாமி பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply