உலகக் கோப்பை கால்பந்தில் சில வெற்றிகள் ஒரு போட்டியின் முடிவாக மட்டுமே இருப்பதில்லை. அவை ஒரு வீரரின் பல ஆண்டு கால போராட்டத்தையும், விடாமுயற்சியையும், மரபையும் நினைவூட்டுவதாக அமையும். 2026 ஃபிபா உலகக் கோப்பையின் ‘ரவுண்ட் ஆஃப் 32’ போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற தருணமும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
68-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அமைதியாக கோலாக மாற்றிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் அணியை ‘ரவுண்ட் ஆஃப் 16’ சுற்றுக்கு அழைத்துச் சென்றதோடு, உலகக் கோப்பை நாக்-அவுட் வரலாற்றில் கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார். மேலும், நாக்-அவுட் போட்டியில் களமிறங்கிய மிக வயதான அவுட்ஃபீல்ட் வீரர் என்ற பெருமையையும் வசப்படுத்தினார். ஆறு உலகக் கோப்பைகளில் விளையாடிய அவரது நீண்ட பயணத்தில் இது நாக்-அவுட் சுற்றில் அடித்த முதல் கோலாகவும் அமைந்தது.
கனவுக்கான அசாத்திய பயணம்
1985-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி, போர்ச்சுக்கலின் மதீரா தீவில் உள்ள ஃபன்ச்சலில் ஜோஸ் டினிஸ் அவெய்ரோ மற்றும் மரியா டோலோரஸ் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக ரொனால்டோ பிறந்தார். நகராட்சி தோட்டப் பணியாளரான தந்தையும், குடும்பத்தை சுமந்த தாயும் வாழ்ந்த எளிய சூழலில்தான் அவரது குழந்தைப் பருவம் கழிந்தது.
பொருளாதார வசதிகள் குறைவாக இருந்தாலும், கால்பந்து மீதான ஆர்வம் மட்டும் ஒருபோதும் குறையவில்லை. தெருக்களிலும் உள்ளூர் மைதானங்களிலும் மணிக்கணக்கில் விளையாடிய அந்தச் சிறுவனின் வேகமும் வெற்றிக்கான தாகமும் ஆரம்பத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
அந்தோரின்கா அணியில் தொடங்கிய பயணம், சிடி நேஷனல் வழியாக ஸ்போர்ட்டிங் சிபியின் இளையோர் அகாடமியை அடைந்தது. ஆனால் அந்தப் பயணத்தின் மிகப் பெரிய தியாகம் என்னவெனில், 12 வயதிலேயே கால்பந்து கனவை நனவாக்குவதற்காக குடும்பத்தைப் பிரிந்து லிஸ்பனுக்கு தனியாகச் சென்றதுதான்.
புதிய நகரம், சூழல், குடும்பத்தின் பிரிவு என பல சவால்கள் அவர் எதிர்கொண்டார். வீட்டின் நினைவால் பலமுறை அழுததாக பின்னர் ரொனால்டோவே கூறியுள்ளார். இருந்தாலும், அந்தக் கண்ணீரை தனது கனவுக்கு தடையாகாமல், ஊக்கமாக மாற்றிக் கொண்டது அவரது தனித்தன்மை.
15 வயதில் ‘டாக்கிகார்டியா’ என்ற இதயத் துடிப்பு கோளாறு அவருக்கு கண்டறியப்பட்டது. ஒரு கால்பந்து வீரரின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கக் கூடிய அந்தச் சவாலை அறுவை சிகிச்சை மூலம் வென்று, சில நாட்களிலேயே மீண்டும் பயிற்சிக்குத் திரும்பினார். பலருக்கு அது முடிவாக இருந்திருக்கும். ஆனால், ரொனால்டோவுக்கு அது தனது மனவலிமையை நிரூபிக்கும் முதல் வாய்ப்பாக மாறியது. பின்னர் உலகமே அறிந்த அவரது வெற்றிப் பயணத்தின் அடித்தளம் அங்கேதான் துவங்கியது.
உலகின் சிறந்த வீரராக…
2003-ல் ஸ்போர்ட்டிங் சிபி மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் இடையேயான நட்பு ஆட்டத்தில் ரொனால்டோவின் ஆட்டத்தை நேரில் பார்த்த சர் அலெக்ஸ் பெர்குசன், அவரை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தம் செய்தார். புகழ்பெற்ற ‘7’-ஆம் எண் ஜெர்சியை அணிந்த இளம் வீரர், தனது வேகம், டிரிப்ளிங், கோல் அடிக்கும் திறன் மற்றும் கடின உழைப்பால் மிகக் குறுகிய காலத்திலேயே உலகக் கால்பந்தின் கவனத்தை ஈர்த்தார்.
ஒழுக்கம், உடற்தகுதி, அணிக்காக விளையாடும் மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்ததில் பெர்குசனின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. மான்செஸ்டர் யுனைடெட்டில் மூன்று பிரீமியர் லீக் பட்டங்கள், யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கோப்பை மற்றும் 2008-ம் ஆண்டு முதல் பாலன் டி ஓர் விருது என அவரது வளர்ச்சி உச்சத்தை நோக்கிச் சென்றது. 2009-ல் உலகின் மிகப் பெரிய பரிமாற்றங்களில் ஒன்றாக ரியல் மாட்ரிட்டுக்கு மாறிய அவர், அந்தக் கிளப்பின் வரலாற்றையே மாற்றினார்.
438 போட்டிகளில் 450 கோல்கள் அடித்து, ரியல் மாட்ரிட்டின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக உயர்ந்தார். அவரது பங்களிப்பில் அந்த அணி நான்கு யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை வென்றது. ஐந்து முறை பாலன் டி ஓர் விருது, சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக கோல்கள், அதிக வெற்றிகள் உள்ளிட்ட பல தனிநபர் சாதனைகள் ஆகியவை அவரை கால்பந்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக நிலைநிறுத்தின. பின்னர் யுவென்டஸ், மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட், தற்போது சவுதி அரேபியாவின் அல் நசர் வரை கிளப்புகள் மாறினாலும், கோல்களை வேட்டையாடும் அவரது திறன் மட்டும் மாறவில்லை.
போர்ச்சுக்கலின் அடையாளம்
2003-ல் தேசிய அணிக்காக அறிமுகமான ரொனால்டோ, 2008 முதல் போர்ச்சுக்கலின் கேப்டனாக இருந்து வருகிறார். அவரது தலைமையில்தான் போர்ச்சுக்கல் 2016-ல் முதல் முறையாக யுஇஎஃப்ஏ யூரோ கோப்பையையும், 2019-ல் யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் பட்டத்தையும் வென்று புதிய வரலாறு படைத்தது.
சர்வதேச ஆண்கள் கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர், அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் போன்ற பல சாதனைகளையும் அவர் படைத்துள்ளார். போர்ச்சுக்கல் கால்பந்தின் அடையாளமாகவே இன்று ரொனால்டோ அறியப்படுகிறார்.
2006 உலகக் கோப்பையில் தொடங்கிய அவரது பயணம், 2018-ல் ஸ்பெயினுக்கு எதிரான ஹாட்ரிக் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. 2022-ல் ஐந்து வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றை படைத்த அவர், 2026-ல் ஆறாவது உலகக் கோப்பையில் களமிறங்கி மீண்டும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் நாக்-அவுட் சுற்றில் தனது முதல் உலகக் கோப்பை கோலை பதிவு செய்ததோடு, உலகக் கோப்பை மற்றும் யூரோ சாம்பியன்ஷிப் தொடர்களில் சேர்த்து 25 கோல்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற புதிய மைல்கல்லையும் எட்டியுள்ளார்.
போட்டிக்குப் பிறகு ஓய்வு குறித்த கேள்விக்கு, “எனது எதிர்காலம் இப்போது முக்கியமல்ல. தற்போது இந்த தருணத்தை ரசிப்பதே முக்கியம்” என்று கூறிய ரொனால்டோ, தனிப்பட்ட எதிர்காலத்தை விட அணியின் வெற்றிக்கே அவர் முக்கியத்துவம் கொடுத்தார். முன்னாள் சக வீரரான லூகா மோட்ரிச்சை “கால்பந்தின் வாழும் ஜாம்பவான்” என்று பாராட்டிய அவரது வார்த்தைகள், போட்டிக்கு அப்பாற்பட்ட மரியாதையையும் வெளிப்படுத்தியதாக அமைந்தன.
வெற்றிக்குப் பின்னால்….
ரொனால்டோவின் நீண்ட கால வெற்றிக்குப் பின்னால் இருப்பது திறமை மட்டுமே அல்ல. கட்டுப்பாடான வாழ்க்கை முறை, திட்டமிட்ட உடற்பயிற்சி, சமநிலையான உணவுமுறை, போதுமான ஓய்வு மற்றும் உடலை எப்போதும் சிறந்த நிலையில் வைத்திருக்கும் ஒழுக்கம் ஆகியவைதான் அவரை 41 வயதிலும் உயர்மட்ட போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக வைத்திருக்கிறது.
கால்பந்துக்கு வெளியிலும் குழந்தைகள் நலன், மருத்துவ உதவி, கல்வி உள்ளிட்ட பல சமூகப் பணிகளுக்கு தொடர்ந்து உறுதுணை புரிந்துவரும் அவர், ஒரு சிறந்த வீரராக மட்டுமல்லாமல் பொறுப்புள்ள மனிதராகவும் திகழ்கிறார்.
குரோஷியாவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, அந்த வெற்றியை போர்ச்சுகல் வீரர்கள் கடந்த ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்த சக வீரர் டியோகோ ஜோட்டாவின் நினைவுக்கு அர்ப்பணித்தனர். ஜோட்டாவின் எண் 21 ஜெர்சியை ஏந்தியபடி அவர்கள் வெற்றியைக் கொண்டாடிய தருணம், அது வெறும் வெற்றிக் கொண்டாட்டமாக அல்லாமல், மறைந்த சக வீரருக்கு செலுத்திய உணர்வுபூர்வமான அஞ்சலியாகவும் அமைந்தது.
காலத்தை வென்ற நாயகன்
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கையை வெறும் கோல்கள், கோப்பைகள் அல்லது சாதனைகளால் மட்டும் அளவிட முடியாது. வறுமையில் பிறந்த சிறுவன், இதயப் பிரச்சினையை வென்று மீண்ட இளைஞன், குடும்பத்தைப் பிரிந்து கனவைத் தேடிய போராளி, உலகின் மிகப் பெரிய கிளப்புகளின் நட்சத்திரம், தனது நாட்டுக்கு முதல் பெரிய சர்வதேச பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன், 41 வயதிலும் உலகக் கோப்பை மேடையில் புதிய வரலாறு படைத்த வீரர் என இந்த எல்லா முகங்களும் சேர்ந்ததுதான் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
பலருக்கு வயது என்பது ஒரு முடிவின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால், ரொனால்டோவுக்கு அது இன்னொரு சாதனையின் தொடக்கமாக அமைகிறது. அதனால்தான் உலகக் கால்பந்து வரலாற்றில் அவரது பெயர் ஒரு தலைசிறந்த கோல் அடிப்பவராக மட்டுமல்லாமல், விடாமுயற்சி, ஒழுக்கம், மனவலிமை ஆகியவற்றின் அடையாளமாகவும், காலத்தை வென்ற கால்பந்து ஜாம்பவானாகவும் என்றும் நிலைத்திருக்கும்.

