எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் இன்று (ஜூன் 24) வழங்கினார்.
முன்னதாக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தின்போது, மின்சார வாரியத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குப் பல்வேறு நிலைகளில் உள்ள 70,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதும் ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், எரிசக்தித் துறையின் மனிதவளத்தை வலுப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்து, தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கிடும் வகையில், ஓராண்டுக்குள் குறைந்தபட்சம் 15,000 பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். \
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 401 நபர்களுக்கும் வாரிய விதிமுறைகளின்படி, உடனடியாக பணிநியமன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு (TNPDCL) தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு முதல்வர் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் வெளிப்படையான ஆட்சிமுறையின் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இந்தப் பணி நியமனங்கள், எரிசக்தித் துறையின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதோடு, தமிழ்நாட்டு மக்களுக்குத் தரமான மற்றும் தடையற்ற மின் சேவைகளை வழங்குவதற்கான மனிதவளத்தை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகவும் இது அமையும்.
இந்நிகழ்ச்சியில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர் / மின்சார வாரியத் தலைவர் டாக்டர் ஜெ. ராதாதிருஷ்ணன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் அணில் மேஷ்ராம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

