அடுக்குமாடி குடியிருப்புகளில் சீரமைப்பு பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்குமார் உத்தரவு

Priya
5 Views
1 Min Read

கண்ணகி நகர், எழில் நகர் ஆகிய திட்டப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், சீரமைப்பு பணிகளை விரைவில் முடிக்க வேண்டுமென, வீட்டுவசதித் துறை அமைச்சர் ராஜ்குமார் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், சென்னையை அடுத்த கண்ணகி நகர் மற்றும் எழில்நகர் பகுதிகளில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை வீட்டுவசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் கு.ப.கிருஷ்ணன், வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பெ.ரமண சரஸ்வதி, சோழிங்கநல்லூர் எம்எல்ஏ ப.சரவணன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதுகுறித்து, அமைச்சர் ராஜ்குமார் கூறும்போது, “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கண்ணகி நகரில் 15,656, எழில் நகரில் 6,000 மற்றும் எழில்நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் 2,048 என மொத்தமாக 23,704 அடுக்குமாடி குடியிருப்புகள் 188 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன.

இதில் கண்ணகி நகர் பகுதியில் ரூ.40 கோடியில் 9152 குடியிருப்புகளின் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 6504 குடியிருப்புகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல்

அதேபோல், எழில் நகர் திட்டப் பகுதியில் 3,232 குடியிருப்புகளில் ரூ.40 கோடியிலும், எழில் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் 1152 குடியிருப்புகளில் ரூ.8.19 கோடியிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சீரமைப்பு பணிகள் உரிய காலத்தில் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply