கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசுகையில், சட்டம்-ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக திமுக மற்றும் தவெக அமைச்சர்களுக்கு இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.
இன்று காலை சட்டப்பேரவை கூடியவுடன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “100 நாள் சாதனை எனப் பெருமை பேசும் தவெக அரசு, இந்த 100 நாட்களில் சட்டம் – ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும். போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கோவையில் மாணவர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கோஷ்டி மோதல் என்று அமைச்சர் கூறுகிறார். உண்மையில் அது கோஷ்டி மோதல் அல்ல. போதைப் பொருள் பயன்படுத்தபட்டது தொடர்பாக புகார் அளித்ததால்தான் மாணவர் கொலை செய்யப்பட்டதாக மாணவனின் பெற்றோர் கூறுகின்றனர். எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்.
திமுக ஆட்சியில் போதைப் பொருள் குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்புக்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிறப்பாக செயல்பட்டதாக 15 காவலர்களுக்கு ஏன் விருது வழங்கினீர்கள். சம்பந்தப்பட்ட சட்டம்-ஒழுங்கு துறையின் அமைச்சர் எங்கே இருக்கிறார்? அவர் ஏன் பதில் சொல்லவில்லை?” என்றார்.
தொடர்ந்து இந்த கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது பல்வேறு கட்சியினரும் பேசினர். பின்னர் தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், “கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கு, உண்மை நிலவரத்துக்கு மாறாக சித்தரிக்கப்படுகிறது. கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்.
எனவே, இதை போதைப்பொருள் விவகாரமாக சித்தரிக்க வேண்டாம். மேலும், உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கோ, காவல்துறைக்கோ இல்லை. கடந்த திமுக ஆட்சியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
அவருடன் அப்போது இருந்து முதல்வர் குடும்பம் தொடங்கி அமைச்சர்கள் வரை தொடர்பில் இருந்தனர். தமிழகத்தில் ஜாபர் சாதிக் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. நமது ஆட்சியில் போதைப் பொருள் அனைத்து வகையிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.
அவரைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “போதைப் பொருள் கலாச்சாரத்தை இந்த 100 நாட்களில் ஏற்படுத்த முடியாது. கடந்த 2020-ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் இல்லை.
போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால்தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கின்றன. திமுக ஆட்சியில் போதைப்பொருள், பாலியல் வன்கொடுமை அதிகரித்தது. திமுக ஆட்சியில் போக்சோ வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்தன. திமுக ஆட்சியில் காவல்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் பேசுகிறேன்.
போதைப்பொருள் அதிகரித்ததால் திமுகவை மக்கள் தூக்கி எரிந்துள்ளனர். திமுகவின் தோல்விக்கு காரணம் போதைப் பொருள் தான். தவெக ஆட்சியில் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத் பேசுகையில், “கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்த விளக்கத்தை ஏற்கெனவே அளித்துவிட்டேன்; ஆனாலும் அது குறித்த விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் சம்பவம் நடைபெற்ற போது திமுக தான் ஆட்சியில் இருந்தது. அவர்கள் ஆட்சியில் மைதான வாசலில் போதைப் பொருள்களை விற்பனை செய்தார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

