“பழனிசாமியின் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டுக்கு பலியாக தயாராக இல்லை” – எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

Priya
46 Views
2 Min Read

“அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டுக்கு பலியாக தயாராக இல்லை. இன்று இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும், மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன்” என எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் எக்ஸ் வலைத்தளப் பதிவில், “எம்ஜிஆரின் லட்சியப் பாதையிலும், ஜெயலலிதாவின் பேரன்பிலும் என் அரசியல் பயணத்தை தொடங்கியவன் நான். பதவிக்காகவோ, சுயநலத்திற்காகவோ இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல. ரத்தமும், சதையுமாய் இந்த இயக்கத்தை என் மூச்சாக கருதி வாழ்ந்தவன்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இயக்கம் சந்தித்த சோதனைகள் அத்தனையும் நீங்கள் அறிவீர்கள். அத்தனை நெருக்கடி நேரங்களிலும் பொதுச் செயலாளர் பழனிசாமி பின்னால் உறுதியாக நின்றவன் இந்த விஜயபாஸ்கர்.

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் அப்பட்டமான, அதிகார, அடக்குமுறை காரணமாக என் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட் டன. கட்சியினர், குடும்பத்தினர் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பாய்ந்தன.

செந்தில்பாலாஜியின் அதிகார மமதையை வீழ்த்தி, அதிகார பல த்தோடும், பண பலத்தோடும் விளங்கிய செந்தில்பாலாஜியை எதிர்த்து பல்வேறு சட்டப் போராட்டம் நடத்தி எத்தனையோ துரோகங்களை தாங்கி மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியவன் நானும், என்னுடன் துணை நின்ற கட்சி தொண்டர்களும். ஆனால், இத்தனை தியாகங்களுக்கும், நான் சுமந்த வேதனைகளுக்கும் இன்று எனக்கு பரிசாக கிடைத்திருப்பது நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி மட்டுமே.

இத்தனை ஆண்டுகள் நாம் யாரை எதிர்த்து யாருடைய மக்கள் விரோத, அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை வழக்குகளையும், ரணங்களையும் நம் உடம்பில் ஏந்தினோமோ இன்று அதே தீய சக்திளுடன் கைகோத்து, அவர்கள் தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுகள் நாம். நமக்கு போய் இப்படியொரு எண்ணம் வரலாமா? தீய சக்தி திமுகவுடன் அதிமுக எப்படி கைகோக்க முடியும்?

நீங்கள் முன்மொழிந்த அந்தச் சமரச முடிவுக்குத்தான் எங்களைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர, உங்களின் தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை. உங்களைத்தான் இந்த இயக்கத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக நாங்களெல்லாம் உயிரைக் கொடுத்து முன்னிறுத்தினோம்.

ஆனால், எங்களின் அத்தனை எதிர்ப்புகளையும், தொண்டர்களின் தார்மிக உணர்வுகளையும் துச்சமாகக் மதித்து, நீங்கள் எடுத்த அந்தத் தன்னிச்சையான முடிவுதான் இன்று ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிவிலும் வேதனையிலும் நிறுத்தியுள்ளது. உங்களின் இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டுக்கு பலியாக, எத்தனையோ ரணங்களைச் சுமந்த இந்த விஜயபாஸ்கரும் என்னுடன் பயணித்த கழக தோழர்களும் தயாராக இல்லை.

தொண்டர்களே, இந்த இயக்கத்திற்காக என் உழைப்பையும், என் வாழ்நாளின் பெரும் பகுதியையும் கொடுத்து விட்டேன். இன்று இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும், மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன். என் உயிரினும் மேலான கரூர தொகுதி பொது மக்களே உங்களின் சேவகனாக என் மக்கள் பயணம் என்றும் தொடரும்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply