வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 865 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 19, 20, 21 ஆகிய நாட்களில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும் மற்ற பகுதிகளுக்கு பலரும் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு 19-ம் தேதி (நாளை) 350 பேருந்துகள், 20-ம் தேதி 365 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருவுக்கு 19, 20-ம் தேதிகளில் தலா 55 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து தலா 20 பேருந்துகளும் இயக்கப்படும். இதேபோல, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வார இறுதியில் பயணம் மேற்கொள்ள 19-ம் தேதி 6,425 பேர், 20-ம் தேதி 3,287 பேர், 21-ம் தேதி 7,213 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் நெரிசலைத் தவிர்க்க, www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
சொந்த ஊர் சென்றவர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

