உதயநிதியின் வேட்புமனு ஆவணங்களை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

Priya
2 Views
1 Min Read

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது குறித்த ஆவணங்களை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக, அதிமுக, தவெக கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது தொடர்பான ஆவணங்களையும், வேட்புமனு பரிசீலனையின்போது தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்கள் குறித்த ஆவணங்களையும் வழங்கக் கோரி, அந்தத் தொகுதியில் போட்டியிட்ட மிலானி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இது சம்பந்தமாக அளித்த விண்ணப்பத்துக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அனைத்து விவரங்களும் ஏற்கெனவே பொது வெளியில் வெளியிடப்பட்டு விட்டதாகவும், முடிவுகள் வெளியான 45 நாட்களுக்கு பிறகு உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்காக இந்த ஆவணங்களை கோரியதாகவும், தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய 45 நாட்கள் மட்டுமே கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு, தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய 45 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாலும், உரிய ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் நிராகரிக்கப்படலாம் என்பதால் மனுதாரர் கோரிய ஆவணங்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அப்போது, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனு குறித்த ஆவணங்கள் மனுதாரருக்கு வழங்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply