தமிழகத்தில் திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை (ஜூன் 7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூன் 7) முதல் 9-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், 10 முதல் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில நாளை (ஜூன் 7) தென்காசி, திருநெல்வேலி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
8-ம் தேதி தென்காசி, திருநெல்வேலி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களிலும், 9-ம் தேதி தென்காசி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 10-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 10-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 5 செமீ, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து, கோவை மாவட்டம் சோலையார், சின்னக்கல்லார், கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, நெய்யூர் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, சென்னை கத்திவாக்கத்தில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

