“பழனிசாமி, ஸ்டாலின், உதயநிதி குதிரை பேரத்தை எதிர்த்தே சி.வி.சண்முகம் எங்களிடம் வந்தார்” – ஆதவ் அர்ஜுனா

Priya
5 Views
3 Min Read

“பழனிசாமி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் இணைந்து ஒரு ஆட்சியை உருவாக்க குதிரை பேரம் நடத்தினார்கள். இது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவினை சி.வி.சண்முகம் வழிநடத்துகிறார். அந்தக் குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவர் முடிவு செய்வார், சட்டச் சிக்கல்களை அவர் எதிர்கொள்வார். அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே வேண்டுகோள்” என பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சமூக நீதிக்கான சத்தியப் பிரமாணத்தை எடுத்துக்கொண்டு அயோத்திதாச பண்டிதரின் வழியில் இந்த ஆட்சி நடக்கும். திமுக ஆட்சியின் நிதிநிலை தொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும். அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்புகளை முதல்வர் விரைவில் வெளியிடுவார்.

சமூக நீதியின் அடிப்படையில் இயங்கக்கூடிய கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும். காங்கிரஸ் அமைச்சரவையில் இணைய வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். வெளியிலிருந்து ஆதரவு வழங்கும் இடதுசாரிகளின் கொள்கை முடிவை நாங்கள் எப்போதும் மதிப்போம். இந்த அரசு சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக இருக்கும்.

அமைச்சரவையில் பங்குபெறுமாறு விசிகவை நாங்கள் அழைக்கிறோம். அதேபோல ஐயுஎம்எல் கட்சியும் அமைச்சரவையில் இணையுமாறு அழைக்கிறோம். இடதுசாரி சிந்தனை கொண்ட அனைத்து தலைவர்களும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும். அன்பான குடும்பம் போல அமைச்சரவை இருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கிறார்.

2026 தேர்தலில் தமிழக மக்களும், இளைஞர்களும், பெண்களும் இணைந்து மாற்றத்தை உருவாக்கினர். 50 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய மாற்றமாக, எங்கள் தலைவர் தலைமையில் அரசு அமைய மக்கள் ஆதரவளித்தனர். தவெக மக்களின் நம்பிக்கையை பெற்ற பின்னர், மக்களின் தீர்ப்பை ஏற்று பழனிசாமி ஒரு எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், மக்களின் தீர்ப்புக்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்க பழனிசாமி கடைசி நிமிடம் வரை முயற்சி செய்தார். இதனை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் பேபி, இடதுசாரி தலைவர்கள் பெ.சண்முகம் மற்றும் மு.வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதிமுக தொடங்கப்பட்டதே திமுகவை எதிர்த்துதான். தேர்தலின் போது அதிமுகவுக்கு வாக்களித்தால், பாஜக தான் ஆட்சியில் இருக்கும் என்று ஸ்டாலினும், உதயநிதியும், திமுகவினரும் பிரச்சாரம் செய்தனர். ஆனால், தேர்தலுக்குப் பின்பு திமுக தனது கொள்கைகளை மறந்து, அதிமுகவோடு சேர்ந்து மக்கள் தீர்ப்புக்கு எதிரான ஓர் அரசை உருவாக்க முற்பட்டார்கள். இதனால் அதிமுகவில் ஒரு பிளவு ஏற்பட்டது. இதற்கு சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். அதிகாரத்துக்காகவோ, அமைச்சர் பதவிக்காகவோ வெளியில் வரவில்லை என அவர் சொல்லியுள்ளார்.

பழனிசாமி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் இணைந்து ஒரு ஆட்சியை உருவாக்க குதிரை பேரம் நடத்தினார்கள். இது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. திமுகவோடு கூட்டணி வைக்க பழனிசாமி துணிந்தது தற்கொலைக்கு சமமானது. அதிமுக ஜெயலலிதா உருவாக்கிய கட்சி. அக்கட்சியை நாங்கள் தோழமை உணர்வுடன் தான் பார்க்கிறோம்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவினை சி.வி.சண்முகம் வழிநடத்துகிறார். அந்தக் குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவர் முடிவு செய்வார், சட்டச் சிக்கல்களை அவர் எதிர்கொள்வார். அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே வேண்டுகோள்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply