வானிலை முன்னறிவிப்பு: சேலம், தி.மலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

Priya
19 Views
2 Min Read

தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை (மே 23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, கேரளம் மற்றும் தென் தமிழக பகுதிகள் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (மே 23) வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 24-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 25 முதல் 28-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை (மே 23) நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும், 24-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

25-ம் தேதி கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 26-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை முதல் மே 26-ம் தேதி வரை வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 7 செமீ, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் 5 செமீ, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், ஈரோடு மாவட்டம் எலந்தகுட்டை மேடில் தலா 4 செமீ, தருமபுரி மாவட்டம் பாலக்கோடில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply