போதைப்பொருளுக்கு எதிராக 5 மாநிலங்கள் வழியாக 1,810 கி.மீ. பைக் பேரணியை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் சென்னையில் தொடங்கி வைத்தார்.
தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, “போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம்” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு காவல் துறையினர் பங்கேற்ற தேசிய பைக் பேரணி சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று நடந்தது. இதை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கூடுதல் டிஜிபி-க்கள் சங்கர், தினகரன், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஐ.ஜி. சுதாகர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சென்னையில் தொடங்கிய இந்த பேரணி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்களை கடந்து செல்கிறது. மொத்தம் 14 நாட்கள் 1,810 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த பேரணி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பேசியபோது, ‘தமிழகத்தில் இந்த ஆண்டில் இதுவரை 12,595 வழக்குகள் போதைப்பொருள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டு 18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 ஆயிரம் கிலோ கஞ்சா, 10 லட்சத்திற்கும் மேல் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

