இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 கொடுத்து வாங்குவதா? – பழனிசாமி விமர்சனம்

Priya
786 Views
3 Min Read

கடந்த ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20-க்கு வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறிய தவெக தற்போது ரூ.35 விலை கொடுத்து வாங்க ஒப்பந்தமிட்டு வெற்றி மெகா ஊழல் திட்டத்தை அரசு அரங்கேற்றியுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது:

தவெக அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 விலை கொடுத்து வாங்குவது கண்டிக்கத்தக்கது. கடந்த திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20-க்கு வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக தவெக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த நிலையில், தற்போது, மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கிட ஒப்பந்தமிட்டு வெற்றி மெகா ஊழல் திட்டத்தை தவெக அரசு அரங்கேற்றியுள்ளது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.35 கொடுத்து 4,400 மெகாவாட் மின்சாரத்தை ஐந்து நிறுவனங்களில் தமிழக அரசு வாங்க உள்ளது. ஏற்கெனவே, ரூ.2 லட்சத்து 48 ஆயிரம் கோடி கடனில் மின்சார வாரியம் இருக்கும்போது, மேலும் அதிக கடன் சுமை ஏற்படும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. மின் தட்டுப்பாட்டை செயற்கையாக ஏற்படுத்தி மக்களுக்கு துன்பம் அளித்து எப்படியாவது மின்சாரம் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு மக்களை தவெக அரசு தள்ளியுள்ளது.

தவெக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்து, அரிசி ஒரு கிலோ 100 ரூபாயைக் கடந்துள்ளது. பருப்பு, எண்ணெய் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வை தடுத்து விலையை குறைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிர்வாக திறனற்ற அரசாக தவெக அரசு உள்ளது.

இடைத்தேர்தலில் அதிகார பலம், பண பலத்தை கொண்டு தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என வர்ணித்த முதல்வர் விஜய், தற்போது, திமுக கூட்டணி கட்சிகளை சேர்த்துக் கொண்டு கல்லாப்பெட்டி கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறார். இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தவெக தாராபுரத்தில் 20 ஆயிரம் வாக்குகள், மதுராந்தகத்தில் 10 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்றுள்ளது.

கூவி கூவி அழைக்கும் தவெக

அதிமுகவிலிருந்து 2,000 கிளைச் செயலாளர்களும், 1,400 ஒன்றிய செயலாளர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறி வருகிறார். இது கனவிலும் நடக்காது. அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் பல ஆண்டுகால உழைப்பில் தற்போது பொறுப்பில் இருக்கிறார்கள். அதிமுகவை குறைத்து எடை போடுவது சரியல்ல. அடுத்த கட்சியிலிருந்து வருகிறார்கள் என்றால், அந்தக் கட்சியில் ஒன்றும் இல்லை என்று தான் அர்த்தம். கிளைச் செயலாளர் வேண்டும், ஒன்றிய செயலாளர் வேண்டும் என கூவி கூவி அழைக்கும் நிலைக்கு தவெக தள்ளப்பட்டுள்ளது.

அன்புமணிக்கு பதில்

அதிமுக குறித்து பாமக தலைவர் அன்புமணி கருத்தை வரவேற்கிறோம். அதே நேரத்தில் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுத்த டாக்டர் ராமதாஸ் தொடங்கிய, பாமக கட்சியை, மேலும் வலிமை பெற அன்புமணி ராமதாஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் மேல் உள்ள நல்ல எண்ணத்திலேயே இதை நான் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

திறனற்ற தவெக அரசு

பழனிசாமி கூறுகையில், ‘மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் நாளை (இன்று) நிறுத்தப்பட உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு முதல்வர் விஜய் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அண்மையில் பிரதமர் மோடி சென்னை வந்த போது கூட, காவிரி பிரச்சினை குறித்து முதல்வர் விஜய் அவரிடம் பேசி தமிழகத்திற்கு 12 டிஎம்சி தண்ணீர் நிலுவையிலுள்ளது குறித்து எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. காவிரி பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத திறனற்ற, டம்மி அரசாக தவெக அரசு உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் டெல்லியில் இருந்தபடி வாக்காளர் பட்டியலில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ள முடியாது. எஸ்ஐஆர் நடவடிக்கைகள் நடந்து முடிந்து தேர்தலும் நடைபெற்று, தற்போது ஆட்சியும் அமைந்துவிட்டது. ஆனால் இப்போது அதைப் பற்றி குறை கூறுவது சரியாக இருக்காது’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply