இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி, வரும் 2027 ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ரூ.500 மற்றும் அதற்குக் குறைவான மதிப்புள்ள யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் அலர்ட் சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் மின்னணு வங்கிப் பரிவர்த்தனை அலர்ட் தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இது குறித்து வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், ஜனவரி 1 முதல் ரூ.500 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் அலர்ட் அனுப்பப்படாது என்றும், அதே சமயம் தொகை வரம்பின்றி அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் மின்னஞ்சல் அறிவிப்புகள் தொடர்ந்து அனுப்பப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தப் புதிய நடைமுறையின்படி, வாடிக்கையாளர்கள் ரூ.100, ரூ.200, ரூ.400 அல்லது ரூ.500 வரை மேற்கொள்ளும் சிறிய மதிப்பிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இனி மொபைல் போனில் எஸ்எம்எஸ் வராது. இருப்பினும், ரூ.500-க்கு மேல் மேற்கொள்ளப்படும் அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் வழக்கம் போல் உடனடி எஸ்எம்எஸ் அலர்ட் தொடர்ந்து வழங்கப்படும்.
மேலும், சிறிய தொகைக்கான பரிவர்த்தனை விவரங்களை வாடிக்கையாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலமாகவும், ஹெச்டிஎஃப்சி மொபைல் பேங்கிங் செயலியின் வாயிலாகவும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
முன்னதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிமுறைகளின்படி, ஜனவரி 1 முதல் ரூ.500-க்கு மேற்பட்ட அனைத்து மின்னணு வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் கட்டாயம் உடனடி எஸ்எம்எஸ் அலர்ட் அனுப்ப வேண்டும். ஆனால், ரூ.500 மற்றும் அதற்குக் குறைவான பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதா வேண்டாமா என்பதை அந்தந்த வங்கிகளின் கொள்கை முடிவுக்கு ரிசர்வ் வங்கி விட்டுள்ளது.
அதேசமயம், ரூ.500-க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் சேவையை வழங்கும் வங்கிகளும் கூட, அதற்காக வாடிக்கையாளர்களிடம் எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, தினசரி கோடிக்கணக்கில் நடைபெறும் சிறிய மதிப்பிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான எஸ்எம்எஸ் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் ஹெச்டிஎஃப்சி வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த மாற்றம் அமலுக்கு வருவதற்கு முன்பாக, ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குடன் சரியான மின்னஞ்சல் முகவரி இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

