சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்து தெரு நாய்களுக்கும் வெறி நாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் முகாம்கள் கடந்த ஆக. 11-ல் தொடங்கப்பட்டன.
இதன் மூலம் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்தூர், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது, வளசரவாக்கம், அடையாறு, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் இம்முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை, வளசரவாக்கம் மண்டலத்தில் 3,943, அடையாறு மண்டலத்தில் 3,985, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 4,153 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆக.11 முதல் அக்.21 வரை நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 1,50,303 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

