சென்னையில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி விநியோகம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் தினசரி பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய ரூ.1 கோடி மதிப்பிலான பால் மற்றும் பால் பொருட்கள், 36 ஆவின் பாலகங்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 16-ம் தேதி ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் முன்னறிவிப்பின்றி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அக்டோபர் 21-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் ஆவின் நிர்வாகத்தைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் வாகனங்களை இயக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 22-ம் தேதி (நேற்று) ஒப்பந்த வாகனங்கள் அனைத்தும் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஐந்து நாட்களாக ஆவின் நிர்வாகம் மேற்கொண்ட துரிதமான மாற்று நடவடிக்கைகளால், சென்னையில் பால் விநியோகம் எவ்விதப் பாதிப்புமின்றி தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

