சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை தொடக்கம்

Priya
641 Views
2 Min Read

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை தொடக்கம்

சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, முதன்முறையாக குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் இந்த புதிய சேவைக்குப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை ஐ.சி.எஃப். ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் ஏசி மின்சார ரயில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கூடுதல் ஏசி ரயில்களை இயக்கக் கோரி பயணிகள் கோரிக்கை விடுத்தனர். தெற்கு ரயில்வேயின் பரிந்துரையின் பேரில், ஐ.சி.எஃப்.

ஆலையில் தயாரிக்கப்பட்ட 2-வது ஏசி மின்சார ரயில் சென்னை கோட்டத்துக்கு வழங்கப்பட்டு, சோதனை ஓட்டத்துக்குப் பின் தற்போது சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் நேற்று முதல் தனது சேவை தொடங்கியது.

12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில் வாரத்தில் 5 நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை) மட்டுமே இயக்கப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சேவை இருக்காது.

தொடக்க நாளான நேற்று காலை 6.30 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், காலை 7.45 மணிக்கு அரக்கோணம் சென்றடைந்தது.

பின்னர் அங்கிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து காலை 9.40 மணிக்கு மீண்டும் சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு இயக்கப்பட்டது.

பயணிகள் உற்சாகம்

தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரயில் நிலைய மேலாளர்கள் ரயிலின் இயக்கத்தை நேரில் கண்காணித்தனர்.

தொடக்க நாள் என்பதால், சாதாரண டிக்கெட் வைத்திருந்த பயணிகள் அனைவரும் கூடுதல் கட்டணமின்றி உற்சாகத்துடன் ஏசி ரயிலில் பயணம் செய்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த ரயிலில் வழக்கமான சாதாரண மின்சார ரயில் டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகள் செல்லாது. பயணிகள் ரயில்வே கவுண்டர்களில் ஏசி புறநகர் ரயில் டிக்கெட் கேட்டுப் பெற வேண்டும்.

அதன்படி, சென்னை சென்ட்ரல் – வில்லிவாக்கம் வரை (பேசின் பாலம், வியாசர்பாடி, பெரம்பூர் மற்றும் லோகோ ஒர்க்ஸ் உள்ளிட்டவை) ரூ.35 கட்டணமாகவும், கொரட்டூர், பட்டரவாக்கம் வரை ரூ.40 கட்டணமாகவும், அம்பத்தூர் முதல் ஆவடி, இந்து கல்லூரி வரை ரூ.60 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.

அந்தவகையில், சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரை ரூ.230 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி, கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply