ரூ. 400 கோடி முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன், “இந்த வழக்கில் சரணடைந்துள்ள முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரைக் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளோம். மற்றொரு நபர் கார் ஓட்டுநர் சரவணனும் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
எனவே இந்த ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “சிறையில் உள்ள அன்பில் மகேஸூக்கு ஜாமீன் கோரும் மனு நவ.17 அன்று விசாரிக்கப்படும்.
நவ.16-க்குள் இந்த மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த அக்.29 அன்று சரணடைந்த, தற்போது திமுகவில் உள்ள விருத்தாச்சலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வி.முத்துக்குமாரை 5 நாட்கள் தங்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நவ.16 வரை காவல்
அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, சிறையில் உள்ள முத்துக்குமாரை 4 நாட்களுக்கு போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
அதன்படி நவ.16-ம் தேதி காலை முத்துக்குமாரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி, அவரை மனதளவிலோ உடல் அளவிலோ துன்புறுத்தக் கூடாது.
வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு முத்துக்குமாரின் நீதிமன்ற காவலை நவ.26 வரை நீட்டித்துள்ளார்.
ரூ.4.5 கோடி முடக்கம்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரின் 29 வங்கிக் கணக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் முடக்கி உள்ளனர்.
அதிலிருக்கும் ரூ.4.5 கோடி பணத்தையும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர். இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் வங்கிக் கணக்குகளையும் காவல் துறையினர் முடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

