கூட்டுறவு வீட்டுவசதித் துறைக்கு பிரத்யேக இணையதளம், செயலியை வீட்டுவசதித் துறை அமைச்சர் ராஜ்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.
இது குறித்து வீட்டுவசதித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை எளிமையாகவும், விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் வழங்குவது மிகவும் அவசியமாகிறது.
அந்த வகையில் ‘கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் பொதுமக்களுக்கு விரைவாக சேவைகள் வழங்கவும், நிர்வாகச் சீர்திருத்தம் மேற்கொள்ளவும், முறைகேடுகளைத்தடுக்கவும், பொதுமக்களி டையே கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் மீதான நம்பகத் தன்மையை அதிகரிக்கவும் இத்துறைக்கென பிரத்யேக இணையதளம், செயலி உருவாக்கப்படும்’ என அமைச்சர் ராஜ்குமார் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதையடுத்து, கூட்டுறவு வீட்டுவசதி துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளம் மற்றும் செயலியை அமைச்சர் ராஜ்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த இணையதளத்தில் முதற்கட்டமாக கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்படுத்தும் மனைத்திட்டங்களின் மனை விற்பனை, சங்க கட்டிடங்களை வாடகைக்கு விடுதல், திருமண மண்டபம் முன்பதிவு செய்தல், நிதி திரட்டுதல், வைப்பீடு திரட்டுதல் போன்ற இணையவழி சேவைகள் வழங்கப்படுகின்றன. கூட்டுறவு வீட்டுவசதி சங்க வரலாற்றில் முதன்முறையாக இணைய விற்பனை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
பொதுமக்கள் www.rcshousing.com, http://www.rcshousing.com என்ற இணையதளம் மற்றும் ‘HOCO’ என்ற கைபேசி செயலி வாயிலாக துறையின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை எளிதில் பெறுவதற்கும், தங்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாக அணுகுவதற்கும் இந்த இணையதளம் மற்றும் செயலி பெரிதும் உதவும்.
இந்நிகழ்வில் துறையின் செயலர் கிர்லோஷ்குமார், வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அந்தோணிசாமி ஜான் பீட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

