தமிழகத்தில் பணியின்போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலர் ஏ.கார்த்திக் வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியின்போது அபாரத் துணிச்சலுடன் செயல்பட்டு உயிர்த்தியாகம் செய்யும் காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் கடந்த சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதை செயல்படுத்துவதற்கான முன்மொழிவை டிஜிபி, அரசுக்கு அனுப்பியிருந்தார். அதில், பணியின்போது வீரதீரச் சூழ்நிலைகளில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதற்காக ஆண்டுதோறும் ரூ.2 கோடி நிதி ஒதுக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதையேற்று சட்டம் ஒழுங்குப் பணியின்போது வீரதீரச் சூழ்நிலைகளில் உயிரிழக்கும் காவலர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் தொடர் செலவினத்துக்காக ரூ.2 கோடி நிதி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான செலவினம் ‘காவல் துறையினர் நலன்’ என்ற தலைப்பின்கீழ் மேற்கொள்ளப்படும். இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான நிர்வாகப் பொறுப்புகளை டிஜிபி கவனிப்பார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பழனிசாமி அறிக்கை
இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தேனியில் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.40 லட்ச நிதியுதவி போதுமானதல்ல.
அதிமுக ஆளுங்கட்சியாகவோ எதிர்க்கட்சியாகவோ இருந்தபோது பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு நிவாரணம் ரூ.1 கோடி வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளோம்.
ஆனால், அது கூட இந்த அரசுக்கு நினைவு இல்லை என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. எனவே, செந்தில்குமார் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

