தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக இன்றும், நாளையும் 11,197 பேருந்துகளை அரசுப் போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், அவர்கள் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக இன்றும், நாளையும் கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கக்கூடிய 4,382 பேருந்துகளுடன், கூடுதலாக 6,815 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 11,197 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதனிடையே, திருச்சியில் இருந்து இன்று இரவு 10.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும், மானாமதுரையில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு தாம்பரம் வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல, கோவை போத்தனுரில் இருந்து இன்று இரவு 8.20 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா வழியாக பிகார் மாநிலம் தர்பங்கா வரை செல்லும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

