“இந்திய அணியில் நெட் பவுலராக இருப்பது எனது நம்பிக்கையை அதிகரிக்கிறது” – தனுஷ் கோட்டியான்

Priya
15 Views
2 Min Read

தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில் சரன்ஷ் ஜெய் ஆஃப் ஸ்பின்னராக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு 2-வது டெஸ்ட்டில் அணியின் ஆடும் லெவனில் விளையாடி வருகிறார். ஆனால், உண்மையில் இவருக்கு முன்னமேயே இந்திய அணியின் கதவுகளைத் தட்டியவர் மும்பையைச் சேர்ந்த ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியான் தான்.

2026-27 துலீப் டிராபியின் முதல் நாளில் வடக்கு மண்டலத்துக்கு எதிராக மேற்கு மண்டலம் 251 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய உதவிய தனுஷ் கோட்டியான், தனது ஆஃப் ஸ்பின் பந்துவீச்சின் முழுமையான திறனை வெளிப்படுத்தினார். 27 வயதான மும்பையைச் சேர்ந்த அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி 72 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பந்துவீச வந்த கோட்டியான், கணிசமாக பந்தை ஸ்பின் செய்ததுடன், பந்தை மேலெழுப்பி வீசுதல் மற்றும் காற்றில் பந்தைச் சற்றுத் திசைதிருப்பச் செய்தல் ஆகிய இரண்டையும் திறம்பட பயன்படுத்தி வடக்கு மண்டல பேட்டர்களைத் திணறடித்தார். 2024-ம் ஆண்டு இறுதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடரின் நடுவே ஓய்வு பெற்றபோது, பார்டர்-கவாஸ்கர் தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு அவர் அழைக்கப்பட்டதற்கான காரணமும் அவரது இந்த ஸ்பெல்தான்.

அந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாத கோட்டியான், தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் இந்திய ‘ஏ’ அணியின் அமைப்பில் இடம்பெற்று வருகிறார். அதேவேளையில், இன்னும் முன்னேற வேண்டிய தேவை இருப்பதையும் அவர் உணர்ந்துள்ளார்.

இந்நிலையில், தி இந்து நாளிதழ் (ஆங்கிலம்) பேட்டியில் தனுஷ் கோட்டியான் கூறியதாவது:

“இலங்கையில் இந்திய அணியுடன் நெட் பவுலராக இருந்ததால் நான் நம்பிக்கையுடன் பந்து வீசினேன். சிறந்த பேட்டர்களுக்கு பந்து வீசினேன். அது பந்தைத் துல்லியமாகவும், நல்ல வேகம் மற்றும் திருப்பத்துடனும் வீச எனக்கு உதவியது.

நான் இந்திய அணியுடன் இலங்கையில் இருந்தபோது சாய்ராஜ் பஹுதுலே சார் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். இங்குள்ள செண்டர் ஆஃப் எக்சலன்ஸில் சுனில் ஜோஷி சாரிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன்.

எனது பந்துவீச்சு கோணங்களில் ஓரளவு முன்னேற்றம் செய்துள்ளேன். ஓட்டத்தைத் தொடங்கும் முறையிலும் சிறிது மாற்றம் செய்துள்ளேன். காற்றின் போக்கை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் கற்றுக்கொண்டு வருகிறேன்.

ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் என்னுடன் பகிர்ந்துகொண்ட விஷயங்களில் இருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன். இவை அனைத்தும் இப்போது எனக்கு உதவுகின்றன” என்று கோட்டியான் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply