20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி – நகோயா மாகாணங்களில் நாளை (செப்டம்பர் 19) தொடங்கவுள்ளன. தடகளம், பாட்மிண்டன், கிரிக்கெட், பாய்மரப் படகுப் போட்டி எனப் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 501 வீரர் – வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 36 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்திய அணியோடு ஜப்பான் விரைந்திருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவோடு நடத்திய நேர்காணலில் இருந்து:
Qதடகள வீராங்கனையாக இருந்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக உயர்ந்துள்ளீர்கள். இந்தப் பயணத்தில் இந்திய விளையாட்டுத் துறை குறித்த உங்கள் பார்வை என்ன?
Aதடகள வீராங்கனையாக இருந்ததால், விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம், எதிர்பார்ப்புகள், தியாகங்கள் ஆகியவற்றை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் போட்டிகளில் பங்கேற்ற காலத்தில் பயிற்சி வசதிகளும் ஆதரவும் குறைவாக இருந்தன. ஆனால், இன்றைய சூழலில் வீரர்களுக்குச் சிறந்த உள்கட்டமைப்பு, நவீன உபகரணங்கள், விளையாட்டு அறிவியல் சார்ந்த ஆதரவு கிடைக்கிறது.
அரசு, இந்திய விளையாட்டு ஆணையம் (SAI), இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA), தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து இந்த ஆதரவை வழங்குகின்றன. கேலோ இந்தியா, ‘TOPS’ போன்ற திட்டங்களும் வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், உடல் இயக்க நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், உளவியலாளர்கள் எனப் பலரும் வீரர்களுக்கு ஆதரவாக உள்ளனர். இந்த ஒட்டுமொத்த ஆதரவுக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
Q2026 ஐச்சி–நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு எப்படி உள்ளது?
Aஇந்திய வீரர் – வீராங்கனைகள் சிறப்பாகப் பயிற்சி பெற்றுத் தயாராகி உள்ளனர். ஆனால், பதக்க இலக்கு என எதையும் நிர்ணயிக்க வேண்டாம் என நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை இலக்காக நிர்ணயிப்பது அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். பதக்கங்களைப் பற்றிச் சிந்திக்காமல் பயிற்சி, போட்டிக்கான தயாரிப்பில் முழுமையாகக் கவனம் செலுத்தித் தங்களால் முடிந்த சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதும், நல்ல முடிவுகள் கண்டிப்பாக வரும்.
Qஅண்மைக் காலமாக இந்தியாவின் பாரா விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் சர்வதேச அளவில் தடம் பதித்துவருவதைப் பற்றி…
A2012 லண்டன் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு பதக்கம் மட்டுமே வென்றிருந்த நிலையில், 2024 பாரிஸ் போட்டியில் 29 பதக்கங்களை வென்றிருப்பது, இந்தத் துறையின் ஆதரவுக் கட்டமைப்பு எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. 2026 கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் மூன்று தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் ஏழு பதக்கங்களை இந்தியா வென்றது.
இந்த முன்னேற்றத்தை நாம் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். அதற்கு, ஆரம்ப நிலையிலிருந்தே வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கவும் சர்வதேச அனுபவம் பெறவும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். உலகத் தரமான செயல்பாட்டுக்கு, உலகத் தரமான போட்டி அனுபவம் அவசியம்.
Q2025இல் தேசிய விளையாட்டுக் கொள்கை கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் இந்திய விளையாட்டுத் துறையில் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?
Aதேசிய விளையாட்டுக் கொள்கை முக்கியமான காலக்கட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. ‘கேலோ இந்தியா’ திட்டம் மூலம் திறமைகளை அடையாளம் கண்டு உயர்நிலைப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு உலகத் தரமான பயிற்சியை உறுதிசெய்ய வேண்டும்.
உடற்பயிற்சி, உடல் சுறுசுறுப்புக்கான ‘ஃபிட் இந்தியா’ திட்டமும் இதில் முக்கியமானது. 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளையும், 2036 ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளையும் நடத்த வேண்டும் என்பது இந்தியாவின் இலக்கு.
Qகிரிக்கெட்டைத் தவிர, சர்வதேச அளவில் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்ட விளையாட்டுகள் எவை?
Aகிரிக்கெட் தற்போது ஒலிம்பிக் போட்டித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. வணிகரீதியாகவும் அது இந்தியாவின் மிகப் பெரிய விளையாட்டு. ஆனால், ஒலிம்பிக் தொடரைப் பொறுத்தவரை ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச் சுடுதல் ஆகியவை இந்தியாவின் பலமாக இருக்கின்றன. இப்போது, தனிநபர் வெற்றிகளைத் தாண்டி வலுவான வீரர்கள் பட்டாளத்தை உருவாக்குவதே நமக்கு இருக்கும் மிகப் பெரிய சவால்.
பெற்றோரும் பள்ளிகளும் கல்விக்குத் தடையாக விளையாட்டைக் கருதக் கூடாது. ஒழுக்கம், தன்னம்பிக்கை, சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமை ஆகியவற்றை விளையாட்டு வளர்க்கிறது. திறமைமிக்க விளையாட்டு வீரர் வீராங்கனைக்கு அதுவே சிறந்த தொழில்வாய்ப்பாகவும் அமையலாம்.
Qவிளையாட்டில் பெண்கள் அதிகம் பங்களிப்பதை ஊக்குவிக்க என்ன செய்ய வேண்டும்?
Aஎன்னுடைய காலத்தில், தேசிய அளவில் விளையாட்டு நட்சத்திரங்களாகத் திகழ்ந்த பெண்கள் மிகக் குறைவு. 1986 ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்தை நான் வென்றது, பல இளம் பெண்கள் விளையாட்டை நோக்கி வர ஊக்கமளித்தது. இன்று கர்ணம் மல்லேஸ்வரி, மேரி கோம், சாய்னா நேவால், பி.வி.சிந்து, சானியா மிர்சா, லோவ்லினா, மீராபாய் சானு, வினேஷ் போகத், மனு பாகர் எனப் பலர் தத்தமது விளையாட்டுகளில் சாதனையாளர்களாகத் தடம் பதித்துள்ளனர்.
இந்த முன்னேற்றம் தொடர வேண்டும். பெண்கள் விளையாட்டில் சாதிக்கப் பாதுகாப்பான வசதிகள், சிறந்த பயிற்சியாளர்கள், போதிய போட்டி வாய்ப்புகள் மட்டுமல்லாமல், குடும்பத்தின் ஆதரவும் அவசியம். அதேபோல், பெண் பயிற்சியாளர்கள், நிர்வாகிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் இருப்பதைப் பார்க்கும்போது மற்ற பெண்களுக்கு அது ஊக்கமாக அமையும்.
Q2036 ஒலிம்பிக் போட்டியை அகமதாபாத்தில் நடத்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வாறு தயாராகத் திட்டமிடப் பட்டுள்ளது?
Aஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தினால் அது வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமையும். அதற்காக அடுத்த பத்தாண்டுகளில் மைதானங்கள், உள்கட்டமைப்புகள் மட்டுமல்லாமல், சிறந்த பயிற்சி, விளையாட்டு அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், வீரர்களுக்கான ஆதரவு ஆகியவற்றையும் வலுப்படுத்த வேண்டும். 2030 காமன்வெல்த் போட்டிகள் இதற்கான முன்னோட்டமாக அமையும்.

