தேனி சம்பவம் – சிறை பொறுப்பு கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்: முதல்வர் விஜய் உத்தரவு

Priya
800 Views
1 Min Read

தேனியில் சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பொறுப்பு சிறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்தும், சிறைத் துறை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்தும் தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அரசு செய்திக் குறிப்பில், “தேனி மாவட்டச் சிறையில் 26.10.2026 அன்று இரவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, தப்பிச் சென்ற 17 கைதிகளையும் மீண்டும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள், கண்காணிப்புப் பணிகளில் நிலவிய மெத்தனப்போக்கு மற்றும் பணியில் ஏற்பட்ட கவனக்குறைவு ஆகியவை குறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தேனி மாவட்டச் சிறையில் 06.08.2024 முதல் சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வந்த துணைச் சிறை அலுவலர் ந. நாகேஸ்வரன், சிறைக் கைதிகள் மற்றும் பணியாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளில் உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக, தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி, 30.10.2026 முதல் மறு உத்தரவு வரும் வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சிறை நிர்வாகத்தில் கண்காணிப்பு, பொறுப்புடைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், மதுரை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் ஆர். கிருஷ்ணராஜ் சேலம் மத்தியச் சிறைக் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படாத வகையில், சிறைத் துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புகளை முழு கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply