“உட்கட்சி பூசலால்தான் தமிழகத்தில் திமுக ஆட்சியை இழந்துவிட்டது. நான் திமுகவுக்கு வந்தது என்னை வளப்படுத்திக் கொள்வதற்காக அல்ல. ஒருநாள் கூட நான் நல்ல தூக்கம் தூங்கியது கிடையாது” என முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், “உட்கட்சி பூசலால்தான் தமிழகத்தில் திமுக ஆட்சியை இழந்துவிட்டது. தேர்தல் தோல்விக்கு நிர்வாகிகளை அழைத்து பேசி இருப்பதை விட கிளைச் செயலாளர்களை அழைத்து திமுக தலைமை பேசியிருக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் முத்துசாமி நினைத்திருந்தால் ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்துப் பேசி உட்கட்சி பூசல்களை தீர்த்திருக்கலாம். இதைச் செய்திருந்தால் 8 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வாய்ப்பாக இருந்திருக்கும்.
நான் எந்த குற்றச்சாட்டையும் யார் மீதும், என்றைக்கும் சொல்லப்போவதில்லை. நான் மாற்று இயக்கத்துக்கு செல்வதாகக்கூட இடைப்பட்ட காலத்தில் பல பேர் பதிவிட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கென்று சில கொள்கைகள் இருக்கிறது. நான் திமுகவுக்கு வந்தது என்னை வளப்படுத்திக் கொள்வதற்காக அல்ல. ஒருநாள் கூட நான் நல்ல தூக்கம் தூங்கியது கிடையாது. திமுகவுக்கு வந்த பிறகு வெற்றி பெறாத தொகுதியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது” என்றார்.
முன்னதாக, திமுக மாவட்டச் செயலாளர் தோப்பு வெங்கடாச்சலம் கட்சியின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக இன்று ‘முரசொலி’யில் வெளியான அறிவிப்பில், ‘ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மத்திய மாவட்டத்துக்குரிய சட்டப்பேரவை தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்தில் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்கள் நிர்வகிப்பார்கள்’ என தெரிவிக்கப்பட்டது.
அதிமுகவில் 2011-16 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம், 2021-ல் திமுகவில் இணைந்தார். 2026 தேர்தலில் திமுக சார்பில் பெருந்துறை சட்டப்பேரவை தொகுதியில் தோப்பு வெங்கடாசலம் போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார், திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாசலத்தை 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். எஸ்.ஜெயக்குமார் 70,302 வாக்குகளும், தோப்பு வெங்கடாசலம் 60,609 வாக்குகளும், தவெகவின் வி.டி.அருணாசலம் 59,483 வாக்குகளும், நாதகவின் லோகு 6468 வாக்குகளும் பெற்றனர். பெருந்துறையில் அதிமுக சார்பில் வென்ற ஜெயக்குமார், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டார்.

