“மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு முழுமையான நீதியைப் பெற்றுத் தருக” – வேல்முருகன்

Priya
719 Views
1 Min Read

மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு முழுமையான நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மாணவர் தமிழ்ச்செல்வன் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விடை கேட்டு ஜனநாயக வழியில் போராடியவர்களை, காவல் துறையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.

நீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பெண் மீது காவல் துறையினர் வன்முறையை ஏவுவது, சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.

போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் நிவேதா மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது உடனடியாக உரிய விசாரணை நடத்தி, தவறு உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையின் அத்துமீறல் குறித்த குற்றச்சாட்டுகளை மூடிமறைக்காமல், வெளிப்படையாக விசாரிக்க வேண்டும்.

அதேவேளையில், மாணவர் தமிழ்ச்செல்வனின் மரணம் தொடர்பான உண்மை முழுமையாக வெளிச்சத்துக்கு வர வேண்டும். இந்த வழக்கில் தற்போதைய விசாரணை குறித்து குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக நேரடியாகத் தலையிட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மக்களின் கேள்விக்கு அதிகாரத்தின் அடக்குமுறை பதிலாக இருக்கக்கூடாது. உண்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதே அரசின் கடமை. மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு முழுமையான நீதியைப் பெற்றுத்தர வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply