தேமுதிகவின் 22-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மையான வெளிப்படையான மக்கள் ஆட்சியை தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம்.
நமது கட்சி தொடங்கி 21 ஆண்டுகள் நிறைவடைந்து. இன்று 22-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். பல ஆண்டுகள் ரசிகர் மன்றமாகவும் நற்பணி இயக்கமாகவும் செயல்பட்டு ரசிகர்களின் விருப்பதிற்கு ஏற்ப 2000-ம் ஆண்டு ரசிகர் மன்றதிற்கு கொடியை அறிமுகப்படுத்தினார்.
2005-ம் ஆண்டு மதுரை மாநகரில், நமது அன்புத் தலைவர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடனும் தெய்வத்துடனும் கூட்டணி வைத்து, 8.33 சதவீத வாக்குகளைப் பெற்று, விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் முதல் வெற்றியை பதித்தோம். 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 10.38 சதவீத வாக்குகளைப் பெற்றோம்.
2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் 29 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று, நமது தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். கட்சி ஆரம்பித்து 6 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பெற்றது, தொண்டர்களின் உழைப்பால் நம் கட்சிக்கு கிடைத்த சாதனை. நமது கட்சி தொடங்கிய நாளிலிருந்து, கட்சி கொடியை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தவர்கள் நமது தேமுதிக தொண்டர்கள்.
தமிழ்நாடு முழுவதும் சுவர் விளம்பரங்கள் செய்து, சாதனை படைத்த நமது தொண்டர்களின் அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது. நமது கட்சி தொடங்கப்பட்ட நாள் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனை நாளாக அமைந்தது. அந்த மாநாட்டில் 28 லட்சம் பேர் கலந்து கொண்டது இன்றளவும் வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
என்றென்றும் நமக்குத் துணை நின்று, நம்மையும் நமது கழகத்தையும் வழிநடத்திய நமது அன்புத் தலைவர் விஜயகாந்தை வணங்கி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம். நமது தலைவர் எதற்காகக் கட்சியைத் தொடங்கினாரோ, அந்த லட்சியத்தையும் கொள்கைகளையும் வென்றெடுப்பதே நமது கடமையாகும். அதற்காக இந்த நாளில் நாம் அனைவரும் ஒன்றிணைத்து உறுதி மொழி ஏற்போம்.
முதல் முறையாக இந்த ஆண்டு 2026 நாடாளுமன்றதின் முதல் உறுப்பினரை பெற்றுள்ளோம். அதேபோல், இந்த ஆண்டு 2026 மீண்டும் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, விஜயகாந்தின் குரலை சட்டமன்றத்தில் மீண்டும் ஒலிக்கச் செய்துள்ளோம்!
நமது தலைவர் மனிதனாகப் பிறந்து, புனிதராக வாழ்ந்து, தெய்வமாக இருக்கிறார். அவரது புகழும் மனித நேயமும், மக்கள் மேல் அவர் கொண்டிருந்த பற்றும், பாசமும், கொள்கைகளும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். அவர் வாழ்ந்தார், இருந்தார், வாழ்ந்து கொண்டே இருப்பார் அனைவரது மனதிலும்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

