அரசுப் பள்ளிகளின் குடிநீர், பாதுகாப்பு வசதிகளை அவசர ஆய்வுக்கு உட்படுத்துக: தவாக

Priya
579 Views
2 Min Read

“மானூர் அரசுப் பள்ளி சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மானூர் ஊராட்சி அரசுப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 5-ஆம் தேதி பள்ளி திறந்தபோது தொட்டியில் அசுத்தம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், பின்னர் அந்தத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது காவல் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், பள்ளி வளாகத்துக்குள் மர்ம நபர்கள் நுழைந்து இதுபோன்ற அருவருக்கத்தக்க செயலைச் செய்யும் அளவுக்கு பாதுகாப்பு ஏன் கேள்விக்குறியாகியுள்ளது? பள்ளி மாணவர்களின் குடிநீர்த் தொட்டிக்குள் அத்துமீறி நுழைந்து மனிதக் கழிவை கலக்கும் அளவுக்கு பள்ளி வளாகம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது யாருடைய தோல்வி?

விடுமுறை காலத்தில் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் யார் என்பதை இதுவரை கண்டறிய முடியாதது ஏன்? பள்ளி நிர்வாகத்திற்கு சம்பவம் தெரிந்த உடனேயே பெற்றோர்களுக்கும் காவல்துறைக்கும் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டதா? இல்லையென்றால், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குறைபாட்டுக்கு யார் பொறுப்பு?

அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவர், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அடிப்படைப் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்யாமல் பள்ளிக் கல்வித் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குள் நுழைந்து, அவர்கள் பயன்படுத்தும் நீர்த்தொட்டியை அசுத்தப்படுத்துவது சாதாரணக் குற்றமாகக் கருதப்படக் கூடாது.

குற்றவாளிகளை மட்டும் தேடுவது போதாது. பள்ளி வளாகத்தின் பாதுகாப்பில் எங்கெல்லாம் குறைபாடு ஏற்பட்டது என்பதையும் கண்டறிய வேண்டும். சம்பவத்தை அலட்சியப்படுத்தியவர்கள் இருந்தால், அவர்களையும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.

தமிழக அரசு, மானூர் அரசுப்ப ள்ளி சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளின் குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகளை அவசர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply