திமுக அதிமுக கூட்டணியில் தன்னை முதல்வராக முன்னிருத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஊடகங்களில் பேசியதாக பரவிய செய்தி திரித்து வெளியிடப்பட்டிருப்பதாக அவர் இன்று சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-
இன்று செய்தியாளர்கள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்போது பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள்.
அப்போது, “தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே” – என்று ஒருசெய்தியாளர் கேட்டார். அதற்கு நான், ‘ அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது’ என்று பதிலளித்தேன்.
எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னை அணுகி அதைப் பற்றி பேசினார்கள் என்பதையே கூறினேன். ‘திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை.
நேற்றும் இன்றும் இது குறித்து ஊடகங்களில் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தான். அவ்வினாவுக்கு நான் விளக்கமளித்தேன். ஆனால், அதனை வேறு பொருள்படும்படி தலைப்பிட்டு செய்திகளைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஊடக அறமில்லை.
தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும்.
இந்தியாவில் உத்தரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்.
எனினும், இன்றைய அரசியல் சூழலில் அப்படியொரு பேச்சு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆகவே, ‘எனக்கும் தகவல் கிட்டியது’ என்று ஒரு ஊடகப் பணியாளரின் கேள்விக்கு நான் விடையிறுத்தேன்.
அதனைத் திரித்து ‘பிறிதொரு பொருளைத்தரும் உள்நோக்கத்தோடு’ ஒருசில ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவது வேதனையளிக்கிறது.

