வனத்துறை சார்பில் ரூ.100.72 கோடியில் வனப்பணி படை புத்துயிரூட்டல் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வனத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு ஆர்.வீ.ரஞ்சித்குமார் பேசியதாவது: வனப்பாதுகாப்பு, வனஉயிரின மேலாண்மை, மனித வன விலங்கு மோதல்தணித்தல், கள அளவிலான அமலாக்கப் பணிகளில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ள தமிழக வனத்துறையின் தயார்நிலை, செயல்திறன் மற்றும் சேவை வழங்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில், 2026-27 நிதியாண்டு முதல் 2030-31 வரை
யிலான 5 ஆண்டுகளில் தமிழ்நாடு வனப்பணி படை ரூ.100.72 கோடியில் மறுசீரமைக்கப்பட்டு வலுப்படுத்தப்படும்.
தமிழ்நாடு வனத்தீ மேலாண்மை திட்டம் ரூ.60.58 கோடியில் செயல்படுத்தப்படும். வனத்துறையில் புதிததாக தேர்வு செய்யப்பட்ட 1947 சீருடை பணியாளர்களுக்கு ரூ.12 கோடியில் அறிமுக பயிற்சி அளிக்கப்படும் அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் ரூ.10 கோடியில் 25 இயற்கை பூங்காக்கள் அமைக்கப்படும். மாநில வன ஆராய்ச்சி நிறுவனத்தில் மர தடயவியல் ஆராய்ச்சி ஆய்வக வசதி ரூ.5 கோடியில் நவீனமயமாக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும்காணப்படும் தனித்துவமான உயிரினங்கள் மற்றும் தாவர இனங்கள் குறித்து மாவட்ட உயிரின பன்முகத்தன்மை சின்னங்கள் ரூ.5 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும். மனித – வன விலங்கு மோதல் மற்றும் வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை உ.யர்த்தப்படும்.
பிச்சாவரத்தில் படகு சவாரி செய்ய ரூ.2 கோடியில் 5 சூரிய ஆற்றல்- மின்னாற்றலில் இயங்கு படகுகள் வாங்கப்படும். வனத்துறையில் பணிபுரியும் 6200 சீருடை பணியாளர்களுக்கு ரூ.1.50 கோடியில் இலவச பேருந்து பயண அட்டை, ஸ்மார்ட் அடையாள அட்டையாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 12 அறிவிப்புகளை வெளியிட்டார்.

