குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் காகிதமற்ற பதிவு கட்டாயம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு

Priya
773 Views
4 Min Read

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், மக்கள் பயன்பாடு சார்ந்த முக்கியத் துறைகளான வணிகவரி மற்றும் பதிவுத் துறைகளில் புரட்சிகரமான பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பேரவையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை விரைவாகவும் தடையின்றியும் பூர்த்தி செய்யும் நோக்கில் 100 சதவீத டிஜிட்டல் மற்றும் காகிதமற்ற ஆவணப் பதிவு முறைகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் த. லோகேஷ்தமிழ்ச்செல்வன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

மாநிலத்தின் வருவாயைப் பெருக்கும் அதேவேளையில், சார்பதிவாளர் அலுவலகங்களில் நிலவும் பணிச்சுமையைக் குறைக்கவும், ஆவணப் பதிவுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சொத்துப் பதிவு முதல் வரி நிர்வாகம் வரை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சந்திக்கும் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன.

குறிப்பாக, வங்கிக் கடன்களுக்கான ஆவணங்கள் மற்றும் குடும்ப மறுசீரமைப்பு தொடர்பான ஆவணப் பதிவுகளில் நேரடி வருகை இல்லாமலேயே இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் நவீன காகிதமற்ற நடைமுறைகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன. இது பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் அலைவதைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவுத் துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் கடன் பெறும்போது மேற்கொள்ளப்படும் உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு (MOD) மற்றும் ரசீது ஆவணங்கள் ஆகியவை நேரடி வருகை இல்லாத ஆவணப் பதிவு முறை (Faceless Registration) மூலம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் வாங்குவோர் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

இதனைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் நான்கு வகையான குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் (Family Arrangement Documents) முழுமையாகக் காகிதமற்ற பதிவு முறையில் (Paperless Registration) பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட உள்ளது. இம்முறையில் ஆவணங்கள் அனைத்தும் இணையவழியிலேயே சரிபார்க்கப்பட்டு உரிய விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும் என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களுக்குச் சேவைகளை விரைவாக வழங்க சார்பதிவாளர் அலுவலகங்களின் எல்லைகளும் மறுசீரமைக்கப்பட உள்ளன. ஒரே வருவாய் கிராமம் முழுமையாக ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டுவரப்படுவதன் மூலம், வெவ்வேறு அலுவலகங்களுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவது தடுக்கப்படும். மேலும், சார்பதிவாளர்களின் பணிப்பளுவைச் சீராகப் பகிர்ந்தளிக்கும் வகையில் எல்லைகள் மறுகட்டமைப்பு செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பதிவுத் துறையின் மென்பொருள் செயல்பாடுகளை நவீனப்படுத்தவும், அதன் தரவு பாதுகாப்பை மேம்படுத்தவும் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளது. இதன்ப மூலம் போலி ஆவணப் பதிவுகளைத் தடுக்கும் அதிநவீனத் தொழில்நுட்ப உத்திகள் பதிவுத் துறை மென்பொருளில் புகுத்தப்படும்.

போலி ஆவணப் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், ஏபிஐ (API) தொழில்நுட்பம் மூலம் நிகழ்நேரத்தில் (Real-time) இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுரிமைச் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் போலியான சான்றிதழ்களைப் பயன்படுத்திச் சொத்துக்களை அபகரிக்கும் சட்டவிரோதச் செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்படும் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உறுதியளித்தார்.

அதேபோன்று, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்பு வாரியத்திற்குச் சொந்தமான நிலங்களின் விபரங்கள் ஏபிஐ தொழில்நுட்பம் வாயிலாகச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் நேரடியாக உள்ளீடு செய்ய வழிவகை செய்யப்படும். இதன் மூலம் அரசு மற்றும் அறக்கட்டளை நிலங்கள் தவறாகப் பதிவு செய்யப்படுவது தடுக்கப்படும். மேலும், கடந்த 2018-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், மையக்கணினி மூலம் விண்ணப்பதாரர்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கும் வசதியும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

வணிகர்களின் நலனைக் காக்கவும், வரி நிர்வாகத்தைச் சீரமைக்கவும் வணிகவரித் துறையிலும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி மற்றும் அதற்கு முந்தைய வரிச்சட்டங்களின் கீழ் வணிகர்கள் சந்திக்கும் குறைகள் மற்றும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண ரூ.3 லட்சம் செலவில் ஒரு சிறப்பு இணையதள வசதி உருவாக்கப்படும்.

தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டம் (TN VAT) மற்றும் மத்திய விற்பனை வரிச்சட்டம் ஆகியவற்றின் கீழ் உள்ள பழைய நிலுவைகளை நிர்வகிக்க, ஒவ்வொரு வணிகவரிக் கோட்டத்திலும் ஒரு தனி வரி விதிப்பு வட்டம் உருவாக்கப்பட உள்ளது. மேலும், வணிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் விசாரணை வரம்பு, தற்போதுள்ள ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநில அளவிலான தரவு பகுப்பாய்வு மற்றும் அதிகாரிகளின் பணித்திறனைக் கண்காணிப்பதற்காகப் புதிய ‘பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு’ (Economic Intelligence Unit) ஒன்று உருவாக்கப்படும். வரிவிதிப்பு, தணிக்கை மற்றும் திருப்புத்தொகை உள்ளிட்ட சேவைகளின் தரத்தை உயர்த்த முகம் தெரியாத வரி நிர்வாக நடைமுறை விரிவுபடுத்தப்படுவதுடன், வணிகவரித் துறையின் பயிற்சிக் கொள்கையும் முழுமையாக மறுசீரமைக்கப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply