“மரகத முருகர் சிலையை உடனடியாக மீட்காவிட்டால்…” – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை

Priya
692 Views
2 Min Read

‘செங்கல்பட்டு பெருங்கரணை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் திருடப்பட்ட மரகத முருகர் சிலையை உடனடியாக மீட்க வேண்டும். விலை மதிப்பற்ற இந்தச் சிலை கடத்தலின் பின்னணியில் இருக்கும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கரணை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், விலைமதிப்பற்ற 2.5 அடி உயர மரகத முருகர் சிலை மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தமிழகப் பக்தர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து இந்து ஆலயங்கள் குறிவைக்கப்படுவதும், சிலைகள் திருடப்படுவதும் தவெக அரசின் அறநிலையத் துறை மற்றும் காவல் துறையின் ஒட்டுமொத்தத் தோல்வியையே காட்டுகிறது.

இவ்வாறு ஆன்மிக அடையாளங்கள் அழிக்கப்படுவதைப் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்க்காது.

திருக்கோயில்களில் போதிய பாதுகாப்பு வசதிகளையோ, நவீன கண்காணிப்புக் கருவிகளையோ உறுதி செய்யாமல் மெத்தனம் காட்டும் முதல்வர் விஜய் அரசின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது தவெக அரசின் ‘மாற்று அரசியல்’ என்பது இந்துக்களின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படும்போது கைகட்டி வேடிக்கை பார்ப்பதுதானா என்ற கேள்வி எழுகிறது.

மேலும், முதல்வர் விஜய்யின் அரசு, கிறிஸ்தவ மதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து ஒருதலைப்பட்சமாக இயங்கி வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் சபாநாயகர் சட்டசபையில் பைபிள் வசனங்களை வாசிப்பதும், நிதியமைச்சர் சட்ட சபையில் ஜெபமாலையுடன் வலம் வருவதும் நடைபெறும் அதே வேளையில், இந்து மதத் திருக்கோயில்களில் இதுபோன்ற களவுகள் சர்வ சாதாரணமாக அரங்கேறுகின்றன.

சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தத் துடிக்கும் விஜய், இந்துக்கள் வழிபடும் கோயில்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறுவது ஏன்?

எனவே, உடனடியாகத் தனிப்படை அமைத்து, திருடப்பட்ட மரகத முருகர் சிலையை மீட்க வேண்டும். விலை மதிப்பற்ற இந்தச் சிலை கடத்தலின் பின்னணியில் இருக்கும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, சிதைந்து கிடக்கும் சட்டம் – ஒழுங்கைச் சீரமைக்கத் தவறினால், பக்தர்களைத் திரட்டி தமிழக பாஜக சார்பில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply