லோக் ஆயுக்தா சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கோரிய வழக்கு: தமிழக அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவு

Priya
21 Views
2 Min Read

தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, ஒன்றிய அரசு, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை 2013 ஆம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 2018 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, 2018 நவம்பர் முதல் அமலுக்கும் வந்தது.

இந்நிலையில், இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தஞ்சாவூரைச் சேர்ந்த வி.ஜீவகுமார் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 முதல் 2024 வரை 617 புகார்களை முடித்து வைத்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் வரை 137 புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும் லோக் ஆயுக்தா இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எத்தனை வழக்குகளில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன நிலையில் உள்ளன என்ற விவரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், லோக் ஆயுக்தா செயலாளராக, துணை செயலாளர் அந்தஸ்து அதிகாரியை நியமிக்க கூறியுள்ள நிலையில், ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள மாவட்ட நீதிபதியை செயலாளராக நியமிக்கும் வகையில் விதிகளை திருத்தி, 2020 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது மத்திய அரசு சட்டத்தை மீறிய செயல் என்பதால், செயலாளர் நியமனம் தொடர்பாக விதிகளை திருத்தி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, 6 வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக மனிதவள மேம்பாட்டு துறை, உள்துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளது

Share This Article
Leave a Comment

Leave a Reply