மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து நீர்நிலைகளில் தூர்வார வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில், ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் ஜூன் 12-ம் தேதிக்கு முன்பே, டெல்டா மாவட்டங்கள் முழுவதும் உள்ள பாசன வாய்க்கால்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு பாசனத்துக்கு தண்ணீர் தங்கு தடையின்றி சென்றது.
மழைக் காலங்களில் நீர் நிலைகளில் தடுப்பின்றி வெள்ள நீர் வேகமாக வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, 2011-ம் ஆண்டு காலகட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ‘நெய்வேலி காட்டா மணக்கு’ என்ற செடி நீர் நிலைகள் முழுவதும் ஆக்கிரமித்து பாசனத்துக்கு, கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அவற்றை முழுமையாக அகற்றி, இன்றுவரை நெய்வேலி காட்டாமணக்கு என்ற செடி டெல்டா மாவட்டங்களில் எங்கும் இல்லை என்ற நிலையை உருவாக்கினோம்.
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியையும், ஆறுகளின் கட்டமைப்புப் பணிகளையும், அந்தந்த பகுதிகளில் உள்ள பதிவு பெற்ற விவசாய சங்கங்களுக்கே வழங்கி, விவசாயிகளே தூர்வாரும் பணியை மேற்கொண்டதால், இப்பணி 100 சதவீதம் முறையாக நடைபெற்றது.
கடந்த ஆட்சியில் டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர்வாரப்படவில்லை. இந்த ஆண்டும் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, டெல்டா மாவட்டங்களில் ‘சி’ மற்றும் ‘டி’ வாய்க்கால்கள் அவசர கோலத்தில் தூர்வாரப்பட்டன.
இதனால் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் திறந்துவிடப்படும் தண்ணீர் முழுமையாக டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளில் சென்றடையாமல் விவசாயப் பணிகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, டெல்டா மாவட்டங்களில் அனைத்து நீர் நிலைகளிலும் தேங்கிக் கிடக்கும் ஆகாயத் தாமரையை அகற்றி, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடை பகுதிவரை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

