அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில், அஜய் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம், ‘டார்க்’. எம்.ஜி. ஸ்டுடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில், அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, மனு ரமேசன் இசையமைத்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து, விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன், இயக்குநர்கள் பா.இரஞ்சித், கார்த்திக் யோகி, விக்னேஷ் கார்த்திக், மாறன் கார்த்திகேயன், நடிகர்கள் கௌதம் கார்த்திக், ரியோ, கலையரசன், டி.சிவா , ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கமலக்கண்ணன், ஃபைவ் ஸ்டார் கல்யாணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், ”அஜய் கார்த்திக்கின் இரண்டாவது திரைப்படம் இது. இதன் ட்ரெய்லர் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. திரையில் அவரது லுக் அண்ட் பிரசன்ஸ் ஸ்ட்ராங்காக இருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்.
இந்தப் படம் திரில்லராக இருப்பதால் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் உருவான பாடல் நன்றாக இருந்தது.

இயக்குநராக இருந்து தயாரிப்பாளராகி இருக்கிறார் நண்பர் கணேஷ் கே பாபு. தற்போது நிறைய படங்களை தயாரிக்கிறார். தன்னுடைய உதவியாளர்களை இயக்குநர்களாக அறிமுகம் செய்வது மிகவும் முக்கியமான விஷயம். அதனால் அவருக்கும் என் வாழ்த்துகள்.
நம்முடன் இருப்பவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது நல்ல விஷயம்தான். ஆனால் இதில் ரிஸ்க் அதிகம். இது சாதாரண விஷயமும் அல்ல. படத்தை தயாரிப்பது என்பது எளிதானது அல்ல. கதையை நம்பி முதலீடு செய்து அந்த பணம் திரும்ப வருமா… வராதா… என்ற தவிப்பு ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் இருக்கும். தயாரிப்பாளர் என்பதால் அது எனக்கும் தெரியும்.
ஃபைவ் ஸ்டார் செந்தில் போன்றவர்கள் படங்களை தயாரித்து வெற்றி பெற வேண்டியது முக்கியம் என நான் நினைக்கிறேன். அதிலும் சின்ன பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வெற்றி பெறுவது ரொம்ப அவசியம் என்று நினைக்கிறேன். எப்படி தமிழக சூழலில் அரசியலில் மாற்றம் வந்ததோ அதேபோல் தமிழ் திரை உலகத்திலும் சின்ன படங்கள் வெளியாகி, தியேட்டர்களை நோக்கி மக்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. ‘பிளாஸ்ட்’, ‘சிறை’ போன்ற படங்கள் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூல் செய்திருக்கிறது. பெரிய பட்ஜெட் படமான ‘கருப்பு’ திரைப்படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அண்மையில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு கூட ஏராளமானவர்கள் வருகை தந்து பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகி இருந்தது.
தியேட்டரை, ஜனநாயகம் மிக்க இடமாக நான் பார்க்கிறேன். மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் நல்ல படங்களை உருவாக்கினால்.. நிச்சயமாக நல்ல லாபத்துடன் கூடிய வெற்றி கிடைக்கும். அந்த வகையில் டார்க் திரைப்படமும் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

