“இஸ்ரேலுக்கான நிதி உதவி நிறுத்தம்” – ட்ரம்ப் அறிவிப்பு

Priya
742 Views
1 Min Read

இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவியை 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முற்றிலும் நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒரு பேட்டியில் ட்ரம்ப் கூறும்போது, “இஸ்ரேலுக்கான நிதி உதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்துவது குறித்து அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசனை நடத்தி ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி வழங்கி உதவ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்குத் தேவையான அமெரிக்க ராணுவத் தளவாடங்களை நேரடியாக விலைகொடுத்து வாங்கிக்கொள்ள முடியும். இருப்பினும், இஸ்ரேலுக்குத் தேவை ஏற்படும் பட்சத்தில் உதவிகள் வழங்கப்படும்” என்றார்.

மேலும், இந்த நிதி உதவி விவகாரம் குடியரசுக் கட்சிக்கு எதிரான ஒரு முக்கியமான அரசியல் ஆயுதமாக ஜனநாயகக் கட்சியினரால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, மிச்சிகன் மாநில செனட் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் அப்துல் எல்-சயீத் போன்றவர்கள், அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் நிதி உதவியைக் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருவதை டிரம்ப் சுட்டிக்காட்டினார். இதனால் குடியரசுக் கட்சியினர் வீண் அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு கையெழுத்தான 10 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்கா ஆண்டிற்கு சுமார் 3.8 பில்லியன் டாலர் ராணுவ உதவியை இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது. இந்த ஒப்பந்தம் வரும் 2028-ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், அதற்கு முன்னதாகவே நிதி உதவியை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

2026 அமெரிக்க இடைத்தேர்தலில் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை மற்றும் இஸ்ரேலுக்கான ஆதரவு ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply