நாடு முழுவதும் வெப்ப அலை அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு அறிவுரை: சுகாதார நிலையங்களில் தனிப்பிரிவு அமைக்க உத்தரவு

Priya
23 Views
1 Min Read

இந்தியா முழுவதும் கோடை வெப்பம் தகித்து வரும் நிலையில், வரும் நாட்களில் வெப்ப அலையின் (Heat Wave) தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலைச் சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு ஒன்றிய சுகாதாரச் செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா கடிதம் எழுதியுள்ளார். அதில், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke) எனப்படும் வெப்பத்தாக்க மேலாண்மைப் பிரிவுகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஆம்புலன்ஸ் சேவைகள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்து மற்றும் உபகரணங்களை இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வெப்பத்தின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, முன்னெச்சரிக்கை அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிடவும் மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வெப்ப அலையின் கோரத்தாண்டவம் ஏற்கனவே பலிகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராஜ்கபூர் ஹெம்ப்ராம் மற்றும் அனுராக் எக்கா ஆகிய இரண்டு பள்ளி ஆசிரியர்கள் வெயிலின் கொடுமையால் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அரசுப் பணியாளர்களின் பாதுகாப்புக் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதிய நேரங்களில் வெளிப்புறப் பணிகளைத் தவிர்க்கவும், போதிய நீர்ச்சத்து எடுத்துக் கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply