ஆந்திராவில் பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: அணிவகுத்து காத்திருக்கும் வாகன ஓட்டிகள்

Priya
23 Views
1 Min Read

ஆந்திர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி, விஜயவாடா, கடப்பா, விசாகப்பட்டினம் மற்றும் கர்னூல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகள் கையிருப்பின்றி மூடப்பட்டுள்ளன. திறந்திருக்கும் ஒரு சில பங்க்குகளிலும் வாகன ஓட்டிகள் கிலோமீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வழக்கமாக நாள்தோறும் அனுப்பும் டேங்கர் லாரிகளை, தற்போது 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அனுப்புவதே இந்தத் தட்டுப்பாட்டிற்கு முக்கியக் காரணம் எனப் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அதிகாரிகள் தரப்பில் மாநிலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்படுவது முரண்பாடாக உள்ளது. தட்டுப்பாடு குறித்த அச்சத்தில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் எரிபொருள் டேங்குகளை முழுமையாக நிரப்புவதாலும், கிராமப்புற மக்கள் கேன்களில் பெட்ரோலைச் சேமிப்பதாலும் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த எரிபொருள் தட்டுப்பாடு போக்குவரத்துத் துறையைத் தாண்டி விவசாயத் துறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆந்திராவில் ரபி பருவ நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டீசல் கிடைக்காததால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடை இயந்திரங்கள் வயல்களிலேயே முடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

மற்றொரு புறம், வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர்களுக்கு 5 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கப்படுவதில்லை என்றும், அதே சமயம் கார்களில் வருபவர்களுக்குத் தாராளமாக எரிபொருள் வழங்கப்படுவதாகவும் பாரபட்சம் காட்டுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தொழிலாளர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பெட்ரோல் பங்க்குகளிலேயே பல மணிநேரம் செலவிடுவதால் ஆந்திராவில் ஒருவிதப் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply