மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

Priya
5 Views
1 Min Read

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட் 2026’ (NEET UG) மே 3-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை (NTA) இன்று வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 22.79 லட்சம் மாணவர்களும், தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதத் தயாராகி வருகின்றனர்.

மாணவர்கள் தங்கள் நுழைவுச் சீட்டை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் பலரும் இணையதளத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்க, கூகுள் குரோம் அல்லது பயர்பாக்ஸ் உலாவிகளைப் பயன்படுத்தவும், கேச் (Cache) நினைவகத்தை நீக்கிவிட்டு முயற்சிக்கவும் என்டிஏ அறிவுறுத்தியுள்ளது. நுழைவுச் சீட்டில் மாணவரின் பெயர், புகைப்படத்துடன் தேர்வு மையத்தின் முழு முகவரி மற்றும் வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன.

தேர்வு மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் இருந்தால் 011-40759000 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். மேலும், தேர்வு குறித்த மன அழுத்தம் அல்லது பதற்றத்தில் இருக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ‘டெலி-மானஸ்’ (Tele-MANAS) என்ற 24 மணிநேர மனநல உதவி எண் 14416 அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மாணவர்களின் வசதிக்காகத் தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply