“ஆபாசநிதிகளை என்ன சொல்ல?” – உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் ஆனந்த் கண்டனம்

Priya
770 Views
2 Min Read

“மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், அவரது பேச்சுக்கு மாற்று கட்சியினர் மற்றும் அரசியல் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில் தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த், உதயநிதியின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

“எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும் கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?

அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்திருக்க முடியும்? மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவுக்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

‘டீசென்ட் அப்ரோச் – டீசென்ட் அட்டாக்’ கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் தலைவர் விஜய்யை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை.

அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவரின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?

அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம். ஆனால், ஆபாசநிதிகளை?

மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க தமிழக முதல்வர் விஜய் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்” என்று அந்த பதிவில் அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply