சென்னையில் திறன் மையம் அமைக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம் – முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

Priya
882 Views
2 Min Read

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட தரமணி வளாகத்தில் 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் உலகளாவிய திறன் மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: முதல்வர் விஜய் முன்னிலையில் இன்று (செப்.18) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக அரசால் சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் ஜிசிசி வழித்தடத்தில் அமைந்துள்ள DLF Downtown தரமணி வளாகத்தில், முதலாம் ஆண்டு 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் மேற்கொள்ளும் வகையிலும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைக்கவுள்ள தனது முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம், உலகளவில் முன்னணி சுகாதார மற்றும் மருந்தக சேவை நிறுவனமாக விளங்குகிறது. மருந்தக சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நுகர்வோர் சுகாதாரப் பொருட்கள் துறைகளில் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre – GCC) இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அமைக்க முன்வந்துள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் வணிக சேவைகளை மையமாகக் கொண்டு அமையவுள்ள இம்மையம், தமிழ்நாடு அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தரமணி வளாகத்தில் நிறுவப்படவுள்ளது.

இன்று முதல்வர் விஜய் முன்னிலையில், முதல் ஆண்டு 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு மற்றும் வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் என்ற வகையில் இந்நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிறுவனம் இந்தியாவிலேயே முதன் முறையாக அமைக்கவுள்ள உலகளாவிய திறன் மையம் தமிழகத்தில் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜிசிசி துறையில் உயர்மதிப்புக் கொண்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழக அரசின் கொள்கைக்கு மேலும் ஊக்கமளிப்பதுடன், தமிழ்நாட்டின் ஜிசிசி வளர்ச்சிப் பயணத்தில் வால்கிரீன்ஸ் இணைவது, மாநிலம் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் வணிகச் சேவை மையமாக உருவெடுத்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

இந்நிகழ்வின்போது, தமிழக முதல்வர் விஜய், பல்வேறு நகரங்களிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், வால்கிரீன்ஸ் உலகளாவிய திறன் மையத்தின் தலைவர் உமாபதி விஸ்வநாதன், வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மசூத் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply