கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட 10 சதவீத தற்காலிக உலகளாவிய இறக்குமதி வரியின் காலக்கெடு இந்த வாரத்துடன் நிறைவடைந்தது. அதை ஈடுசெய்யும் வகையில் இந்தியாவுக்கு கூடுதலாக 10 சதவீதவரியை அமெரிக்கா விதித்துள்ளது.
கட்டாயத் தொழிலாளர் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்யத் தவறியதற்காகவும், கட்டுப்பாடுகளைச் சரிவர அமல்படுத்தாத தற்காகவும் உலகம் முழுவதும் 60 நாடுகள் மீது அமெரிக்கா வரிகளை விதித்துள்ளது.
தற்போதைய 10 சதவீத வரி விதிப்பின் மூலம் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளுக்கு இணையான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜெமிசன் கிரீர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மனித உரிமை மீறலாகவும், சர்வதேச வர்த்தகச் சந்தையை சீர்குலைக்கும் நடைமுறையாகவும் இருக்கும் கட்டாயத் தொழிலாளர் முறையைச் சரிசெய்வதற்கு இந்த வரி விதிப்பு நடவடிக்கை தொடக்கப் புள்ளியாக அமையும்.
கட்டாயத் தொழிலாளர் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்கு விரைவாகத் தடை விதித்துச் சட்டங்களை இயற்றிய வர்த்தகக் கூட்டு நாடுகளின் நடவடிக்கை ஊக்கமளிக்கிறது. அச்சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதை எதிர்நோக்கியுள்ளோம். இவ்வாறு கிரீர் கூறினார்.

