வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.17 வரை மிதமான மழை வாய்ப்பு

Priya
1043 Views
2 Min Read

தமிழகத்தில் நாளை (செப்.12) முதல் செப்.17-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (செப்.12), நாளை மறுதினமும் (செப்.13) மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் கடலோர தமிழக மாவட்டங்கள், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருச்சி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

செப்.14-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

செப்.15-ம் தேதி விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

செப்.16, 17 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உள் தமிழகத்தில் நாளை (செப்.12) முதல் செப்.15-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (செப்.12) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழைப் பொழிவு:

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஐசிஎஃப்பில் 6 செ.மீ, சென்னை அயப்பாக்கம், அண்ணா நகர் மேற்கு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் தலா 4 செ.மீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர், சென்னை கொரட்டூர், ஐஸ் ஹவுஸ், அமைந்தகரை, திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, காரையூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply