மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பிய ராஜேஷ் லக்கானி, நில நிர்வாக ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 1992-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, தமிழக அரசில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.
இதற்கிடையே கடந்த 2025-ம் ஆண்டு மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இணைச்செயலர் அந்தஸ்திலான அந்த பணியில் அவர் ஓய்வுபெறும் 2029-ம் ஆண்டுவரை நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது தமிழக அரசுப் பணிக்கு திரும்பியுள்ளார்.
ராஜேஷ் லக்கானி தமிழக அரசுப் பணிக்கு திரும்புவதை தொடர்ந்து, அவருக்கு நில நிர்வாக ஆணையர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு அல்லது தேவைப்படும் வரையில் கூடுதல் தலைமைச்செயலர் அந்தஸ்தில் நில நிர்வாக ஆணையர் பதவி தற்காலிகமாக உருவாக்கப்பட்டு அதில் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச்செயலராக உள்ள சாய்குமாருக்கு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ராஜேஷ் லக்கானியின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பேரிடர் மேலாண்மை ஆணையர்
இதேபோல், தமிழகத்தில் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஏ.சிவஞானம், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் நியமிக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை ஆணையர் பணியிடம் ஓராண்டு காலம் அல்லது தேவைப்படும் வரை தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பதவி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பதவிக்கு இணையானது என்று தமிழக தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

