இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 49.6 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதன் மூலம், உலகிலேயே மிக வேகமாக வறுமையைக் குறைத்த நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
உலக வங்கி அக். 2026-க்கான இந்திய வறுமை மற்றும் சமத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தீவிர வறுமை மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பான வறுமையைக் குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் 2011 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 49.6 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம், உலகிலேயே மிக வேகமாக வறுமையைக் குறைத்த நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இருப்பினும், நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகமாக உள்ளது. இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 சதவீத தொழிலாளர்களின் சராசரி வருமானம், கடைசி 10 சதவீதத்தில் உள்ள தொழிலாளர்களின் வருமானத்தைவிட கிட்டத்தட்ட 13 மடங்கு அதிகமாக உள்ளது.
மேலும், பணவீக்கத்தைக் கணக்கில் கொண்ட உண்மையான ஊதியத்தில் தேக்கநிலை, வேலைவாய்ப்புகளின் தரம் குறைவாக இருப்பது, பொருளாதார வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்காதது போன்ற சவால்களும் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டின் வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில், ஒரு நாளைக்கு ரூ.399-க்கும் குறைவான வருமானத்தில் வாழும் மக்களின் விகிதம், இந்தியாவில் 2011-ல் 57.7 சதவீதமாக இருந்தது. இது 2023-ல் 16.1 சதவீதமாகக் கடுமையாகக் குறைந்துள்ளது.
அதேபோல், தீவிர வறுமையும் கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு நாளைக்கு ரூ.285-க்கும் குறைவான வருமானத்தில் வாழும் மக்களின் விகிதம், இதே காலகட்டத்தில் 27.1 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாகச் சரிந்துள்ளது.
கிராமப்புறங்களில் அதிக வறுமை
நாடு முழுவதும் வறுமை குறைந்திருந்தாலும், அதன் தாக்கம் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இல்லை. ஒரு நாளைக்கு ரூ.399 வருமானம் என்ற அளவுகோலின்படி, 2023-ல் கிராமப்புறங்களில் வறுமை விகிதம் 19.3 சதவீதமாக இருந்தது. நகர்ப்புறங்களில் இது 8.6 சதவீதமாக மட்டுமே இருந்தது.
இந்தியாவில் 2017 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 13.4 கோடி பேர் கூடுதலாக வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இது வேலை செய்யும் வயதுடைய மக்கள்தொகையின் அதிகரிப்பைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும். இருப்பினும், வேலைவாய்ப்புகள் அதிகரித்த அளவுக்கு ஊதியம் உயரவில்லை. பணவீக்கத்தைக் கணக்கில் கொண்ட உண்மையான வருமானத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

