வரி அதி​காரி​களின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு

Priya
726 Views
1 Min Read

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை​யில் 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்​றது. இதில், ஜிஎஸ்டி அதி​காரி​களுக்கு வழங்கப்பட்டிருந்த கைது அதி​காரங்​களை ரத்து செய்ய ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

மேலும், தவறு இழைத்​தவர்​கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுப்​ப​தற்​கான குறைந்​த​பட்ச வரிஏய்ப்பு வரம்பு ரூ.1 கோடியி​லிருந்து ரூ.5 கோடி​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. சட்​டப்​படி​யான குறைந்​த​பட்​ச தண்​டனை என்​பது நீக்கப்பட்டுள்ளது. இனி ஒவ்​வோர் வழக்​கிலும் அபராதம், சிறைத்​தண்​டனை அல்​லது இரண்​டும் விதிக்கப்​படு​வதை நீதி​மன்​றத்​தின் முடிவிற்கே விட்​டு​விடத் தீர்​மானிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், எந்​தவொரு குறிப்​பிட்ட அபராத​மும் குறிப்​பிடப்​ப​டாத பொது​வான தவறுகளுக்கு விதிக்​கப்​படும் அதி​கபட்ச அபராதத் தொகை ரூ.25,000-லிருந்து ரூ.10,000 ஆக குறைக்க இந்த கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது.

இதன் மூலம், வரி செலுத்​துபவர் தாமத​மாகத் தாக்​கல் செய்​தாலோ, தவறு செய்​தாலோ அல்​லது பணம் செலுத்​து​வ​தில் தாமதம் ஏற்​பட்​டாலோ, வரி வசூல், வட்டி மற்​றும் அதற்​குரிய அபராதம் மட்​டுமே விதிக்​கப்​படும். அதைத் தாண்டி கைது போன்ற எந்​த​விதக் கடுமை​யான நடவடிக்​கைகளும் இருக்​காது.

நாடு முழு​வதும் உள்ள தொழில் நிறு​வனங்​கள் கடுமை​யான வரி நடை​முறை​கள் குறித்​துப் புகார் தெரி​வித்து வந்​ததுடன், சுலப​மாகத் தொழில் செய்​வதற்​கான சூழலை உரு​வாக்​கக் கோரிக்கை விடுத்​திருந்​தன. அந்த அடிப்​படை​யில் இது​போன்ற முடிவு​கள் எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய நிதி​யமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

ஜிஎஸ்டி கவுன்​சில் கூட்​டத்​துக்குப் பின் செய்​தி​யாளர்​களிடம் பேசிய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், “ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்​றங்​களைச் செய்​வதை விட, தொழில் செய்​வதை எளி​தாக்​கு​வது மற்​றும் தொழில் நிறு​வனங்​களின் வரி விதிப்​புச் சுமை​களைக் குறைப்​பதை நோக்​க​மாகக் கொண்ட செயல்​முறை சார்ந்த சீர்​திருத்​தங்​களி​லேயே ஜிஎஸ்டி கவுன்​சில் அதி​க கவனம்​ செலுத்​தி​யுள்​ளது” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply