ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘தர்மன்’ படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். இதில் சிம்ரன், ராஷி கன்னா, யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்துக்குள் நிறைவடையும் என்று அஸ்வத்மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘‘தர்மன் படத்தின் 2 கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ரஜினிகாந்த் இன்றைய ‘ஜென்-ஸி’ தலைமுறையினருக்கு ஏற்ற துடிப்பான மனநிலையில் இருக்கிறார்; இப்படம் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். ரஜினி சார் போன்ற இனிமையான மனிதரைப் பார்த்ததே இல்லை.
அவர் ஓர் அற்புதமானவர். நான் அவர் அருகில் செல்லும் போதெல்லாம் அவர் எழுந்து நிற்கிறார். அதற்கான காரணத்தைக் கேட்டபோது, ‘இது கலைக்கும் இயக்குநருக்கும் நான் அளிக்கும் மரியாதை’ என்றார்” என அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார். சிலம்பரசனுடன் இணைய இருக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

