“கபாலி படத்திற்குப் பிறகு நிறைய பெண்கள் முடி வெட்டிக்கொண்டனர்” – நடிகை சாய் தன்ஷிகா

Priya
21 Views
2 Min Read

ஶ்ரீ மோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்பில் செந்தில்குமார் தயாரிப்பில், கௌதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள படம் ‘யோகி டா’. இந்தப் படத்தில், சாய் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 6ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் கௌதம் கிருஷ்ணா பேசியபோது, “இந்தப் படம் டெக்னீசியன்களால் சாத்தியமாகி இருக்கிறது. இந்த மேடையில் கதாநாயகி சாய் தன்ஷிகாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் ஹீரோவை வைத்து தான் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டேன். ஆனால், நான்கு ஹீரோ சேர்ந்து நடித்தால் எப்படி ஆக்சன் வருமோ, அதை சாய் தன்ஷிகா இந்தப் படத்தில் செய்துள்ளார். சாய் தன்ஷிகா, இந்தப் படத்திற்காக உயிரையே கொடுத்து நடித்துள்ளார்” என்றார்.

நடிகை சாய் தன்ஷிகா, “மேடையில் இருக்கும் எனது படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நீங்கள் இல்லை என்றால் இது சாத்தியமாகி இருக்காது. நாம் பேசுவதை குறைத்துக் கொண்டு, நாம் என்ன செய்கிறோம் என்பதை படத்தில் காட்ட வேண்டும். 

‘கபாலி’ படத்தில் ரஜினி சாரின் மகளாக நடித்தேன். அதில் என்னுடைய பெயர் யோகி. அப்படித்தான் இந்த ‘யோகி டா’ ஆரம்பித்தது. இந்த படத்திற்காக டைட்டிலை யோசிக்கும் போது, ‘கபாலி’ படத்தில் உள்ளதுபோல ஹேர் ஸ்டைல், ஆக்சன் இந்த படத்தில் இருந்தது. அதனால்தான் இந்த டைட்டில் வைத்தோம். 

‘கபாலி’ படத்திற்காக உண்மையாலுமே முடியை வெட்டினேன். ஆனால், இந்தப் படத்தில் விக் வைத்துள்ளேன். ‘கபாலி’ படத்தின்போது நல்ல வரவேற்பு இருந்தது. நிறைய பெண்கள் அந்தப் படத்திற்கு பிறகு தங்களது முடியை வெட்டிக்கொண்டனர். ஒரு படம் எந்த அளவிற்கு அனைவரையும் இம்பாக்ட் செய்கிறது என்பதை அன்று புரிந்து கொண்டேன். பெண்கள் தங்களது முடியை முக்கியமானதாக நினைப்பார்கள். அதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. 

கொரோனாவிற்குப் பிறகு ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் படம் குறைவாகவும், ஓடிடி தளங்களில் அதிகமாகவும் வெளியாகிறது. ஒரு படத்தை ரிலீஸ் செய்வதற்கு பெரிய சிக்கல்கள் இருந்து வருகின்றன. இதுபோன்ற ஒரு தருணத்தில் எங்களது படத்தை வெளிக்கொண்டு வரும் சிவ கணேஷ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மோனிகா பிக்சர்ஸ் செந்தில் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தப் படத்தில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. ‘பேராண்மை’ படத்தில் முதல் முறையாக ஆக்சன் காட்சிகளில் நடித்தேன். அதுதான் இன்றுவரை எனக்கு உதவி வருகிறது. இந்தப் படத்தின் அனைத்து ஆக்சன் காட்சிகளும் டூப் இல்லாமல் நானே செய்தேன். 

பெண்கள் நினைத்தால் ஆண்களுக்கு ஈடாக சண்டை காட்சிகள் பண்ண முடியும். இன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. பெண்களை உடல் ரீதியாக துன்புறுத்தினால் அதன்பிறகு அவர்களால் வளர முடியாது என்று நினைக்கின்றனர். அதைத்தாண்டி வரமுடியும் என்பதைத்தான் ‘யோகி டா’ படம் பேசுகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு பெண்களுக்காக இந்தப் படத்தை எடுத்துள்ளோம். என்னால் முடிந்தவரை உழைப்பைக் கொடுத்து இந்தப் படத்தை உங்களுக்காகக் கொண்டு வருகிறேன். இது போன்ற படங்களை ஆதரியுங்கள்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply